கோவை மாவட்டத்தில் முதல் முறையாக கால்நடைகளை தேடி வரும் இலவச மருத்துவ முகாம் துவக்கம்

கோவை மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கான 240 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில், இன்று பதுவம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சென்னப்ப செட்டி புதூரில் சுற்றுவட்டார கிராமங்களை ஒருங்கிணைத்து முதல் முகாம் நடைபெற்றது.



கோவை: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்படும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கோவை மாவட்டம் சூலூர் வட்டம் பதுவம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எம். ராயர் பாளையம், சென்னப்ப செட்டி புதூர் கிராமங்களில் இன்று நடைபெற்றது .

இந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை, மண்டல இணை இயக்குனர் மருத்துவர் பெருமாள் சாமி இன்று தொடங்கி வைத்தார்.



இந்த முகாமில் சுற்று பகுதியில் உள்ள கால்நடைகளின் ரத்தம் மற்றும் பால் மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்த மாதிரிகளின் பரிசோதனை முடிவின் அடிப்படையில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்க்கு உண்டான கிருமிகளுக்கு தகுந்த தொடர் சிகிச்சை இங்குள்ள கால்நடை மருத்துவரால் தொடர்ந்து அளிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், இந்த முகாமில் கால்நடைகளுக்கு கர்ப்பகால சினைப் பரிசோதனை செய்ய உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய சிடி ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கால்நடைகளில் செயற்கை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்கம், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், கோமாரி நோய், தடுப்பூசி, கோழிகளுக்கு கழிசல் நோய் தடுப்பூசி மற்றும் இதர நோய்களுக்கு மருத்துவம் செய்யப்பட்டது.



மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் (அம்மை), பறவைக் காய்ச்சல். பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் பற்றியும் அதற்கு பண்ணையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

தீவனப் பயிர்கள் வளர்ப்பு, கால்நடைகளில் தாது உப்புக்கள் பற்றாக்குறை, கால்நடைகளில் உணவு கட்டுப்பாடு போன்றவற்றில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் மருந்து நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், கால்நடைகளுக்கு மருந்துகள் அளிக்கும் முறை பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.



தினமும் ஒரு முட்டை; சத்து மாத்திரை வேண்டாம் என்ற உறுதிமொழியுடன் முட்டை தினமும் இந்த முகாமில் கொண்டாடப்பட்டு பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்பட்டது.



ஏராளமான விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த முகாமில் தங்கள் கால்நடைகளுக்கு தகுந்த சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

இம்முகாமை பதுவம்பள்ளி ஊராட்சித் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (பொறுப்பு) தீவன அபிவிருத்தி மற்றும் கால்நடை பெருக்கம் மருத்துவர் தமிழ் குமரன், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மருத்துவர் இளங்கோ, உதவி இயக்குனர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் கீதா மற்றும் பதுவம்பள்ளி கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணன், மருத்துவர் சதீஷ், மருத்துவர் காளியப்பன், கால்நடை ஆய்வாளர்கள் மீனாட்சி சுந்தரம், தமிழரசி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் தமிழ்செல்வன், சிவசாமி, சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும், இவ்விழாவில் கௌசிகா நதி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் கௌசிகா நதி மேம்பாட்டு சங்க விவசாயிகள் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter