கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு எத்தியோபியா நாட்டின்‌ உயர்மட்டக்‌ குழுவினர் ஆய்வு

இந்தியாவில் வேளாண்துறையின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக எத்தியோப்பியா நாட்டின் உயர்மட்ட குழுவினர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.


கோவை: எத்தியோபியா நாட்டின் வேளாண் துறை அமைச்சர்‌ முனைவர்‌. மமெல்லஸ்‌ மக்கோனென்‌ ஐமர்‌ தலைமையில்‌ ஒரு உயர்மட்டக்‌ குழு கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு கடந்த 9ஆம் தேதி வருகை தந்தனர்.

உலக வங்கியின்‌ இந்தியா-எத்தியோபியா பல்முனை வேளாண்‌ விரிவாக்கம்‌ பற்றிய அறிவு பரிமாற்றம்‌ என்ற திட்டத்தின்‌ கீழ்‌ இந்த உயர்மட்டக்‌ குழு இந்தியாவிற்கு கல்வி சுற்றுலா பயணம்‌ மேற்கொண்டுள்ளனர்‌. இந்தியாவிலுள்ள, அரசு, அரசு சாரா அமைப்புகள்‌, கூட்டுறவு நிறுவனங்கள்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌ மேற்கொள்ளும்‌ வேளாண்‌ விரிவாக்கப்‌ பணிகள்‌ பற்றி அறிந்து கொள்வதே இந்தக்‌ குழுவின்‌ முக்கிய நோக்கமாகும்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ விரிவாக்கக்‌ கல்வி இயக்குநர்‌ முனைவர்‌ பி.பொ. முருகன், எத்தியோப்பியா உயர்மட்டக்‌ குழுவினை கோவையில்‌ வரவேற்றார்‌. இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி இக்குழுவானது ஈரோடு மாவட்டத்தில்‌ நம்பியூர்‌ வட்டாரத்தில்‌ அமைந்துள்ள அரசு வேளாண்மைத்‌ துறையின்‌ ஒருங்கிணைந்த வேளாண்‌ விரிவாக்க மையத்திற்கு ஆய்விற்காக சென்றனர்.

அப்போது ஈரோடு மாவட்டத்தின்‌ இணை வேளாண்‌ இயக்குநர்‌ சின்னுசாமி அந்த குழுவினை வரவேற்று, விவசாயிகள்‌ பயன்‌ கருதி அந்த மையம் மேற்கொள்ளும்‌ விரிவாக்கப்‌ பணிகள்‌ மற்றும்‌ வேளாண்‌ திட்டங்கள்‌ குறித்து விளக்கினார்.

அதனைத்‌ தொடர்ந்து அக்குழுவின்‌ உறுப்பினர்கள்‌ அங்கு குழுமியிருந்த விவசாயிகளுடன்‌ உரையாடி, அந்த மையம்‌ மேற்கொள்ளும்‌ விரிவாக்கப்‌ பணிகள்‌, எவ்வகையான நன்மைகளை அடைந்தனர்‌ என்பது பற்றி அறிந்து கொண்டனர்.

அதன்‌ பின்னர், அக்குழு ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில்‌ அமைந்துள்ள மைராடா (MYRADA) நிறுவனத்தின்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையத்திற்கு சென்றனர். அந்த நிலையத்தின்‌ தலைவர்‌ முனைவர்‌ அழகேசன், அக்குழுவினை வரவேற்று, அவர்கள்‌ மேற்கொள்ளும்‌ வேளாண்‌ விரிவாக்கப்‌ பணிகள்‌ பற்றி கருத்துக்காட்சி மற்றும்‌ கலந்துரையாடல்‌ நிகழ்ச்சி மூலமாக விவரமாக எடுத்துரைத்தார்‌.

இந்த நிகழ்ச்சியில்‌, அப்பகுதி விவசாயிகள்‌, கழனி உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனத்தின்‌ தலைமை செயல்‌ அலுவலர்‌ மற்றும்‌ சத்தியாமங்கலம்‌ தாழவாடி மலைப்‌ பகுதியைச்‌ சேர்ந்த சோளிகர்‌ மலைவாழ்‌ மக்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.



இதனையடுத்து மாலையில், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ இவ.கீதாலட்சுமியுடன் எத்தியோப்பியா குழுவினர் சந்தித்து, எந்தெந்த வகையில்‌ தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகமும்‌ எத்தியோபியா நாட்டைச்‌ சேர்ந்த வேளாண்மைத்‌ துறையும்‌ இணைந்து செயல்படலாம்‌ என்று கலந்துரையாடினர்‌.



இதனை தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி எத்தியோப்பியா நாட்டின் வேளாண் உயர்மட்டக்‌ குழுவானது, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள விவசாயி தகவல்‌ மையம்‌ (Kisan Call Center), தண்ணீரில்‌ கரையக்‌ கூடிய உரங்கள்‌ தயாரிக்கும்‌ வசதி, நானோ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்‌ துறை, பூச்சிகள்‌ அருங்காட்சியகம்‌ ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்படும்‌ பணிகள்‌ பற்றி அறிந்து கொண்டனர்‌.



மேலும்‌, வேளாண்‌ அறிவியல்‌ நிலையங்கள்‌, பூச்சி - நோய்கட்டுப்பாடு குறித்த அறிவுரைகள்‌, வானிலை அறிவிப்புகள், உயிர் கட்டுபாடு காரணிகள், தனியார்‌ நிறுவனங்கள்‌ மேற்கொள்ளும்‌ விரிவாக்கப்‌ பணிகள்‌ போன்றவை குறித்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன்‌ கலந்துரையாடினர்‌.



இதன்‌ அடுத்த கட்டமாக, இந்தக்குழு ஆந்திர பிரதேச மாநிலத்தின்‌ விஜயவாடா மற்றும்‌ புதுடெல்லிக்கு செல்கின்றனர்‌. இந்தக்‌ கல்வி சுற்றுலா சம்மந்தப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும்‌ புதுடெல்லியில் உள்ள உலக வங்கியின்‌ ஆலோசகர் இம்மத்பட்டேல்‌ ஏற்பாடு செய்திருந்தார்.

தமிழ்நாடு வேவேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திற்கு வருகை தொடர்பான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின்‌ விரிவாக்கக்‌ கல்வி இயக்ககமும், திட்டமிடல்‌ மற்றும்‌ கண்காணிப்பு இயக்ககமும்‌ இணைந்து செய்திருந்தனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter