மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை, வர்த்தக ரீதியில் வெளியிட தடை!

மரபணு முறையில் மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை, வர்த்தக ரீதியில் வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்சநீதி மன்றம் மேலும் நீட்டித்துள்ளது.

நம் நாட்டில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பயிரிடப்படும் முக்கிய பயிராக கடுகு உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை, வர்த்தக ரீதியில் வெளியிடும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் 17ம் தேதி வரை, மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. நேற்று மீண்டும் விசாரணை நடந்தபோது மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆஜரானார்.

அப்போது, அவர் தரப்பில் கூறியதாவது:- பல வயல்களில், மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளை, போதிய முன் சோதனை நடத்தாமல், அரசு பயிரிட்டு வருகிறது. இந்த விதை தொடர்பான உயிரி பாதுகாப்பு கையேடு, அரசின் சம்பந்தப்பட்ட துறை இணையதளத்தில் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வகை விதைகளுக்கு, குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை முடிவில், தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர், கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளுக்கு, தடையை நீட்டித்து உத்தரவிட்டது. பின், 24ம் தேதிக்கு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Newsletter