திருந்திய நெல் சாகுபடிக்கு அரசு மானியம் கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

திருந்திய நெல் சாகுபடிக்கு அரசின் மானியம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

டெல்டா பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக கடலூர் விளங்கி வருகிறது. எனினும் டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் சலுகைகள், மாவட்டத்திலுள்ள டெல்டா அல்லாத மற்ற பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. தற்போது டெல்டா பகுதியில் இயந்திர நடவுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து, விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை திருந்திய நெல் சாகுபடியாக, கைகளால் நாற்று நடவு செய்யும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 2.40 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடிக்கு அரசு இலக்கு நிர்ணயித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. இதில் 94 ஏக்கரில் டெல்டா பகுதியில் மட்டும் நாற்று நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் இயந்திரம் மூலமாக நடவு செய்வோருக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அரசால் மானியமாக வழங்கப்படுகிறது.

காவிரியிலிருந்து நீர் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தபோதிலும், விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து தற்போது நாற்றுக்களை வயலில் நட்டு வருகின்றனர். இயந்திரங்கள் கிடைக்காத பகுதியில் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் மூலமாக கைகளால் நாற்றுக்களை நடவு செய்கிறார்கள். எனவே, இயந்திர நடவுக்கு வழங்குவது போல் தங்களுக்கும் நடவு மானியம் வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி டி.சுந்தரமூர்த்தி கூறுகையில், இயந்திர நடவுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் குழித்தட்டு முறையில் மட்டுமே நடவு செய்வார்கள். ஒரு ஏக்கருக்கு 120 முதல் 130 குழித்தட்டு நாற்றுகள் தேவைப்படுகின்றன. ஒரு தட்டுக்கு ரூ.33 கட்டணமாக வசூலிக்கிறார்கள். மேலும் ரூ.100 பேட்டாவாக வழங்க வேண்டியுள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.4,400 வரையில் செலவு செய்ய வேண்டியுள்ளது.

மேலும் குறிஞ்சிப்பாடியில் தற்போது நாற்றுநடவு இயந்திரம் கிடைப்பதில்லை. அதனால் அதிக காலம் காத்திருக்க வேண்டியதை தவிர்க்க தொழிலாளர்களைக் கொண்டு கைகளால் நடவு செய்கிறோம். இதற்கு ஏக்கருக்கு பல்வேறு பணிகளுக்காக 18 ஆள்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு கூலியாக ரூ.130 வழங்கப்படுகிறது. மொத்தச் செலவே ரூ.2,400 தான். கைகளால் நடவு செய்வதில், திருந்திய நெல் சாகுபடி முறைப்படி கயிறு கட்டி வரிசைப்படியே நடவு செய்யப்படுகிறது. இப்பகுதியில் விவசாயத்துக்கு ஆள்கள் அதிகமாக கிடைப்பதால் இயந்திரம் தேவைப்படுவதில்லை. எனவே இயந்திர நடவுக்கு வழங்கப்படுவது போல் கை நடவுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெ.ஹரிதாஸ் கூறுகையில், இயந்திரம் மூலமாக நடவு செய்வதால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்பதால் அரசு இதனை ஊக்குவித்து வருகிறது. மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 40 ஆயிரம் ஹெக்டேரில் இயந்திர நடவு செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இயந்திர நடவு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் மீண்டும் கை நடவுக்கு மானியம் வழங்க முடியாது. எனினும் இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

Newsletter