பொள்ளாச்சியில்‌ தென்னை வேர்‌ வாடல்‌ நோய்‌ தாக்குதல் குறித்த கள ஆய்வு!

பயிர் பாதுகாப்பு மையம் இயக்குநர் தலைமையில் பொள்ளாச்சியில் வேர் வாடல் நோய் தாக்குதல் குறித்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் தென்னை வேர் வாடல் நோய் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.



கோவை: சமீப காலங்களில்‌ கற்பக விருட்சம்‌ என்று அழைக்கப்படும்‌ தென்னையில்‌ பூச்சி மற்றும்‌ நோய்‌ தாக்குதலால்‌ விவசாயிகள்‌ பெரும்‌ பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்‌. அந்த வகையில்‌ தற்போது, தமிழ்நாட்டில்‌ கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில்‌ வேர் வாடல்‌ நோய்‌ தாக்குதல்‌ பரவலாக காணப்படுகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டம்‌ பொள்ளாச்சியில்‌ இந்நோய்‌ தாக்குதலின்‌ தீவிரத்தை அறியவும்‌, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடந்த 26ஆம் தேதி அன்று கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் தலைமையில்‌ பேராசிரியர் மற்றும்‌ தலைவா்‌, பயிர் நோயியல்‌ துறை, கோயம்புத்தூர், பேராசிரியர் மற்றும்‌ தலைவா்‌, தென்னை ஆராய்ச்சி நிலையம்‌, ஆழியார் நகர், வேளாண்‌ விஞ்ஞானிகள்‌, வேளாண்‌ உதவி இயக்குனர்கள்‌ மற்றும்‌ வேளாண்‌ அலுவலா்கள்‌ ஆகியோர்‌ கொண்ட குழு, பொள்ளாச்சி தெற்கு கஞ்சம்பட்டி கிராமத்தில்‌ கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில்‌ விவசாயிகளின்‌ தோட்டங்களில்‌ தென்னை வேர் வாடல்‌ நோய்‌ தாக்குதல்‌ இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வேர் வாடல்‌ நோய்‌ கட்டுப்பாடு குறித்து விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ கலந்துரையாடல்‌ நடைபெற்றது.



இந்த கலந்துரையாடல்‌ நிகழ்ச்சியில்‌ பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் மற்றும்‌ பேராசிரியர் மற்றும்‌ தலைவர்கள்‌ வேர் வாடல்‌ நோய்‌ அறிகுறிகள்‌, பரவும்‌ விதம்‌, அதன்‌ ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்‌ மற்றும்‌ “கோகோகான்‌ நுண்ணுயிரி உபயோகம்‌ குறித்து விளக்கம்‌ அளித்தனர்‌.

மேலும்‌ நோயின்‌ ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து காலம்‌ தாழ்த்தாமல்‌ கீழ்கண்ட மேலாண்மை முறைகளை கையாளுமாறு கேட்டுக்கொண்டனர்‌. இப்பயிற்சியை பொள்ளாச்சி (தெற்கு) வட்டார வேளாண்‌ உதவி இயக்குனர்‌ மற்றும்‌ வேளாண் அலுவலர்கள்‌ ஒருங்கிணைத்தனா்‌. இப்பயிற்சியில்‌ முன்னோடி விவசாயிகள்‌ பலர்‌ கலந்துகொண்டு தென்னை வேர் வாடல்‌ நோய்‌ குறித்த தங்களுடைய அனுபவங்களை எடுத்துரைத்தனர். இப்பயிற்சியில்‌ 20-க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ கலந்தகொண்டு பயனடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து, பயிர்‌ பாதுகாப்பு மைய இயக்குனர்‌ மற்றும்‌ விஞ்ஞானிகள்‌, ஆனைமலை தாலுகா, காளியப்பன்‌ கவுண்டன்‌ புதூரைச் சேர்ந்த வரதராஜ்‌ வயலில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பயிர் நோயியல்‌ துறை மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ வேர் வாடல்‌ நோய்‌ மேலாண்மை குறித்த ஆய்வுத்திடலை பார்வையிட்டு அதன்‌ முன்னேற்றம்‌ மற்றும்‌ செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள்‌ குறித்து விவாதித்தனா்‌.

தென்னை வேர்‌ வாடல்‌ நோயின்‌ அறிகுறிகள்‌:

இலைகள்‌ கீழ்நோக்கி வளைந்து மனிதனின்‌ விலா எலும்பு போல காணப்படும்‌. இலைகள்‌ மஞ்சள்‌ நிறமாக மாறுவதோடு ஓரங்கள்‌ கருகி காணப்படும்‌. மரத்தின்‌ குருத்துப்பகுதி மற்றும்‌ பூங்கொத்துகள்‌ கருகும்‌. வேர்கள்‌ அழுகிவிடும்‌. இந்நோய்‌ பைட்டோபிளாஸ்மா என்ற நுண்ணுயிரியால்‌ ஏற்படுகிறது. இந்நுண்ணுயிரியானது, தத்துப்பூசசி மற்றும்‌ கண்ணாடி இறக்கை பூச்சிகளின்‌ மூலம்‌ ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு பரவுகிறது.

ஒருங்கிணைந்த வேர்‌ வாடல்‌ நோய்‌ மேலாண்மை முறைகள்‌:

சரியான வடிகால்‌ வசதி செய்யவேண்டும்‌. ஒரு மரத்திற்கு வருடத்திற்கு 50 கிலோ தொழு உரம்‌, 5 கிலோ வேப்பம்‌ புண்ணாக்கு, 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட்‌ மற்றும்‌ 3.5 கிலோ மூரியேட்‌ ஆப்‌ பொட்டாஷ்‌ என்ற அளவில்‌ சரி பாதியாக பிரித்து ஆறு மாத இடைவெளியில்‌ இரண்டு முறை இட வேண்டும்‌. மேலும்‌ ஒரு மரத்திற்கு 100 கிராம்‌ டிரைக்கோடொமா ஏஸ்பரெல்லம்‌ மற்றும்‌ 100 கிராம்‌ பேசில்லஸ்‌ சப்டிலிஸ்‌ என்ற எதிர் நுண்ணுயிரிகளை 5.0 கிலோ மக்கிய தொழு உரத்துடன்‌ கலந்து வட்டப்பாத்தியில்‌ மூன்று மாத இடைவெளியில்‌ இட்டு மண்ணை கிளறிவிட வேண்டும்‌.

ஒரு மரத்திற்கு 100 கிராம்‌ அசோஸ்பைரில்லம்‌, 100 கிராம்‌ பாஸ்போபாக்டீரியா மற்றும்‌ 50 கிராம்‌ வேம்‌ எனும்‌ வேர் உட்பூசணம்‌ ஆகியவற்றை 5.0 கிலோ மக்கிய தொழு உரத்துடன்‌ கலந்து வருடத்திற்கு இரு முறை இட வேண்டும்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தென்னை டானிக்‌ 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன்‌ கலந்து ஆண்டிற்கு இரு முறை வோ மூலம்‌ செலுத்த வேண்டும்‌.

நோய்க்காரணியை பரப்பும்‌ சாறு உறிஞ்சும்‌ பூச்சிகளான கண்ணாடி இறக்கை மற்றும்‌ தத்தப்பூச்சிகளைக்‌ கட்டுப்படுத்த வேப்பம்‌ புண்ணாக்கு பவுடர்‌ 200 கிராம்‌ அல்லது பிப்ரோனில்‌ 0.3 ஜி குருணையை சரி விகிதத்தில்‌ மணலுடன்‌ கலந்து குருத்தின்‌ அடிப்பகுதியில்‌ இடவேண்டும்‌. இலை அழுகல்‌ நோயைக்‌ கட்டுப்படுத்த ஒரு மரத்திற்கு 2 மில்லி ஹெக்சாகோனசோல்‌ பூசணக்கொல்லியை 300 மில்லி லிட்டர் தண்ணீரில்‌ கலந்து குருத்து பகுதியில்‌ 45 நாள்‌ இடைவெளியில்‌ ஊற்ற வேண்டும்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ “கோகோகான்‌' நுண்ணுயிரியை பெருக்கம்‌ செய்ய, 150 லிட்டர் நீரில்‌ 10 கிலோ நாட்டுச்‌ சர்க்கரை மற்றும்‌ 5 லிட்டர் தயிர் சோத்து நன்கு கலக்கவேண்டும்‌. பிறகு 5 லிட்டர் “கோகோகான்‌”: தாய்க்கலவையை சேர்த்து மூங்கில்‌ கம்பு கொண்டு நன்கு கலக்கவேண்டும்‌. கடைசியாக சமையல்‌ உப்பு 500 கிராம்‌ சேர்த்து கலக்கவேண்டும்‌. இக்கலவையை சாக்குப் பையினால்‌ மூடி நிழற்பாங்கான இடத்தில்‌ 5-7 நாட்கள்‌ வளர்க்கவேண்டும்‌. தினமும்‌ மூன்று முறை சுத்தமான மூங்கில்‌ கம்பினால்‌ நன்கு கலக்கிவிடவேண்டும்‌. இவ்வாறு பெருக்கம்‌ செய்த கோகோகான்‌ நுண்ணுயிரி 2 லிட்டருடன்‌ 8 லிட்டர் நீர் கலந்து மரத்தின்‌ வேர்ப்பகுதி நன்கு நனையுமாறு மூன்று மாத இடைவெளியில்‌ ஊற்றவும்‌.

மேலும்‌ சந்தேகங்களுக்கு பேராசிரியர் மற்றும்‌ தலைவர், பயிர் நோயியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்,‌ 0422-6611226 என்ற எண்ணில்‌ தொடர்புகொண்டு கேட்டறியலாம்‌.

Newsletter