கோவை TNAU-வில் களை மேலாண்மைக்கான ஆராய்ச்சி திட்டத்தின் 29-வது வருடாந்திர ஆய்வு கூட்டம்..!

வரும்‌ காலங்களில்‌ மேம்பட்ட தொழில்நுட்பங்களான படப்பகுப்பாய்வு, மனித இயந்திரம்‌, இயந்திரகற்றல்‌ ஆகியவற்றை கொண்டு களை நிர்வாகம்‌ மேற்கொள்ளுவது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ விளக்கினார்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ களை மேலாண்மைக்கான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின்‌ 29-வது வருடாந்திர ஆய்வு கூட்டம்‌ நேற்று தொடங்கியது.

கோயம்புத்தூர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ இயங்கக்கூடிய உழவியல்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள களை மேலாண்மை பிரிவும்‌, ஜபல்பூரில்‌ உள்ள இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிகழகத்தின்‌ களை ஆராய்ச்சி இயக்ககமும்‌ இணைந்து களை மேலாண்மைக்கான அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித்‌ திட்டத்தின்‌ 29-வது வருடாந்திர ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறது.‌ நேற்று தொடங்கிய இந்த ஆய்வு கூட்டம் மூன்று நாட்கள் வரை நடைபெறுகிறது.



இந்நிகழ்வின்‌ துவக்க விழாவில்‌ தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ வெ. கீதாலட்சுமி, ஜபல்பூர் ‌களை ஆராய்ச்சி இயக்கத்தின்‌ இயக்குநர்‌ ஜே.எஸ்‌. மிஸ்ரா, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ ஆராய்ச்சி இயக்குநர்‌ எம்‌. ரவீந்திரன்‌, பயிர்‌ மேலாண்மை இயக்குநர்‌ எம்‌.கே. கலாராணி, அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தின்‌ மூத்த ஆராய்ச்சியாளர்கள்‌ மற்றும்‌ நாட்டின்‌ பல்வேறு மையங்களில்‌ பணிபுரியும்‌ முதன்மை ஆராய்ச்சியாளர்கள்‌, விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ ஆகியோரும்‌ கலந்து கொண்டனர்‌.

களை ஆராய்ச்சி இயக்கத்தின்‌ இயக்குநர்‌ ஜே.எஸ்‌.மிஸ்ரா, வரவேற்புரை வழங்கினார்‌. பயிர்‌ மேலாண்மை இயக்குநர்‌ எம்‌.கே.கலாராணி வாழ்த்துரை வழங்கும்‌ போது மாறிவரும்‌ பருவநிலைக்கு ஏற்றாற்போல்‌ களை மேலாண்மை குறித்த தேவைகளின்‌ சிறப்பம்சத்தை எடுத்துரைத்தார்‌. ரசாயனம்‌ இல்லா களை நிர்வாகத்திற்கான புதிய தொழில்நுட்பங்கள்‌ உருவாக்குவதற்கான தேவையை கோடிட்டு காட்டினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர்‌ எம்‌.ரவீந்திரன்‌, பயிர்‌ உற்பத்திக்கான உயிர்‌ மற்றும்‌ உயிரற்ற காரணிகளால்‌ ஏற்படும்‌ சவால்கள்‌ குறித்தும்‌ மற்றும்‌ பத்தாண்டுகளுக்கு ஒருமுறை களைச்‌ செடிகளின்‌ பரிமாணத்தை கண்காணித்து ஆவணப்படுத்துவது குறித்தும்‌ விவரித்தார்‌.

மேலும்‌, மானாவாரிப்‌ பயிர்களான பயறு வகைகள்‌ மற்றும்‌ எண்ணெய்வித்துப்‌ பயிர்களில்‌ களைக்கொல்லியினை தாங்கி வளரக்கூடிய ரகங்கள்‌ உருவாக்குவது குறித்தும்‌ எடுத்துரைத்தார்‌. மேம்பட்ட தொழில்‌ நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, சூரிய ஆற்றல்‌, வெட்ப அலை போன்றவற்றினை பயன்படுத்தி சிறந்த களை நிர்வாகம்‌ செய்ய வேண்டும்‌ என்பதனை மேற்கோள்‌ காட்டினார்‌.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ வெ.கீதாலட்சுமி தலைமை உரையில்‌ காலநிலை மாற்றத்தினால்‌ ஏற்படும்‌ தாக்கம்‌, குறிப்பாக நீர்‌ பற்றாக்குறை மற்றும்‌ அதிகரித்து வரும்‌ களைச் செடிகளினால்‌ உணவு உற்பத்திக்கு ஏற்படும்‌ சவால்கள்‌ குறித்து அதிமுக்கியத்துவம்‌ கொடுத்து பேசினார்‌.



களைச்‌ செடிகளின்‌ சிற்றினம்‌ மாறுபாடுகள்‌ குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்‌, மேலும்‌ வரும்‌ காலங்களில்‌ மேம்பட்ட தொழில்நுட்பங்களான படப்பகுப்பாய்வு, மனித இயந்திரம்‌, இயந்திரகற்றல்‌ ஆகியவற்றை கொண்டு களை நிர்வாகம்‌ மேற்கொள்ளுவது குறித்தும்‌ விளக்கினார்‌.

இறுதியாக ஜபல்பூர்‌, களை ஆராய்ச்சி இயக்கத்தின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ ஆர்‌.பி.டுபே நன்றியுரையாற்றினார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter