குமரியில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு: கிலோ ரூ.30க்கு விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை சார்ந்தப் பகுதிகளைத் தவிர இதர அனைத்துப் பகுதிகளிலும் மரவள்ளிக்கிழங்கு பயிராகிறது. உணவுப் பயிராக உள்ள மரவள்ளிக்கிழங்கின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் சரிந்த நிலையில் கிலோவிற்கு ரூ.15 என்ற அளவில் சில்லறை விலையாக விற்பனையானது.

இந்நிலையில் நிகழாண்டு மரவள்ளி சாகுபடியாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் இதன்விலை அதிகரித்துள்ளது. மரவள்ளிக் கிழங்கு சாகுபடியாளர்களிடமிருந்து கடந்த ஆண்டை விட அதிக விலைக்கு கிழங்குகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சந்தைகளில் கிலோவிற்கு ரூ.30 வரை சில்லறை விலையாக கிழங்குகள் விற்பனையாகின்றன. இதன் விலை அதிகரித்துள்ளதால் கிழங்குசாகுபடியாளர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது.

இதுகுறித்து குலசேகத்தில் முன்னோடி விவசாயி ஒருவர் கூறியது: நிகழாண்டில் கடும் வறட்சி காரணமாக மரவள்ளியில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கிழங்கிற்கான தேவைப்பாடும் அதிகரித்துள்ளது.

சேலத்திலுள்ள ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் ஆலைகளும், கேரளத்திற்கும் அதிக அளவில் கிழங்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மக்கள் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கை உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்தனர்.

தற்போது உணவிற்காக பயன்படுத்துவது குறைந்து விட்டது. ஆனால் கேரளத்தில் கப்பையும், மீனும் என்ற உணவுக்கூட்டிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதனால் கேரளத்துக்கு குமரி மாவட்டத்திலிருந்து அதிக அளவில் மரவள்ளிக்கிழங்குகள் உணவிற்காக கொண்டு செல்லப்படுகின்றன. மரவள்ளிக்கிழங்கின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார் அவர்.

Newsletter