நிலக்கோட்டை பகுதியில் கிணறுகள் வறண்டன: மலர் செடிகளை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள்

நிலக்கோட்டை பகுதியில் கிணறுகள் வறண்டு விட்டதால் தண்ணீரின்றி கருகும் மலர் செடிகளை காப்பாற்ற விவசாயிகள் டிராக்டர் தண்ணீரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3500 ஹெக்டேரில் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பூ உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் திண்டுக்கல் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை வட்டம் எத்திலோடு, முருகத்தூரான்பட்டி, சிலுக்குவார்பட்டி, குல்லலக்குண்டு, நூத்தலாபுரம், பிள்ளையார்நத்தம், விழிநாயக்கன்பட்டி, குண்டலப்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, நரியூத்து உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகை, முல்லை, பிச்சிப்பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால், இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிவடைந்து கிணறுகள் வறண்டு விட்டன. இதன் காரணமாக பூச்செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 15 ஆண்டுகள் வரை பலன் தரும் மலர் செடிகளை பாதுகாக்க, சில விவசாயிகள் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், எத்திலோடு சுற்றியுள்ள 1000 ஏக்கர் சாகுபடி பரப்பில் 300 ஏக்கர் செடிகள் கருகி விட்டன. மேலும், 300 ஏக்கர் செடிகள் கருகும் நிலையில் உள்ளதால், வடகிழக்கு பருவ மழையை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இதுகுறித்து எத்திலோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆர்.சந்திரசேகர் கூறியதாவது: ஒருமுறை நடப்படும் மல்லிகை செடி 15 ஆண்டுகள், முல்லை 20 ஆண்டுகள், அரளி 25 ஆண்டுகள் வரையிலும் பயன் தரக் கூடியவை. கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், நிலக்கோட்டை வட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிணறுகள் அனைத்தும் வறண்டு விட்டன.

தற்போது இவற்றை பாதுகாக்க, டிராக்டரில் தண்ணீர் வாங்கி நீர்ப்பாய்ச்சுகிறோம். 6000 லிட்டர் கொண்ட ஒரு டேங் தண்ணீர், ரூ.600 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும், கடும் வெயில் காரணமாக, டிராக்டரில் தண்ணீர் பாய்ச்சினாலும் அனைத்து செடிகளையும் பாதுகாக்க முடிய வில்லை. இதனால் பூக்களின் வரத்து கடந்த சில நாள்களாக குறைந்து விட்டது. திருமணம், கோயில் திருவிழா உள்ளிட்ட விழாக்கள் இல்லாத நிலையிலும், கிலோ மல்லிகை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவார காலத்துக்குள் மழை பெய்யாவிட்டால், மேலும் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செடிகள் கருகி விடும் என்றார்.

விவசாயி எஸ்.கோவிந்தன் கூறும் போது, வியாபாரிகளிடம் கடன் வாங்கியே, பல விவசாயிகள் முதலீடு செய்துள்ளனர். செடிகள் கருகி வருவதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இக்கட்டான நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாதிப்படைந்த செடிகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மல்லிகை விலை கிலோ ரூ.1000 ஆக வாய்ப்பு: தண்ணீரின்றி மல்லிகை செடிகள் கருகி வருவதால், பூக்களின் வரத்தும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், தீபாவளி பண்டிகை மற்றும் ஐப்பசி முகூர்த்த நாள்களில், மல்லிகைப் பூவின் விலை கிலோ ரூ.1000-க்கும் கூடுதலாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter