கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் வெளியீடு..!

கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இரண்டு தயாரிப்புகளான, “கரும்பு ஜாம்” மற்றும் “பூச்சிக்கொல்லி நூற்புழு கலவை” ஆகியவற்றை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.


கோவை: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இரண்டு புதிய தயாரிப்புகளை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 93-வது ஆண்டு பொதுக்கூட்டம். சமீபத்தில் புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் நடந்தது.



இதில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கோவையில் உள்ள ICAR-கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இரண்டு தயாரிப்புகளான, “கரும்பு ஜாம்” மற்றும் “பூச்சிக்கொல்லி நூற்புழு கலவை” (Entomo-pathogenic Nematode formulation) ஆகியவற்றை வெளியிட்டார்.

இக்கூட்டத்தில், இவ்விரு பொருட்களையும் தயாரித்த விஞ்ஞானிகளான டாக்டர் சி.சங்கரநாராயணன் மற்றும் டாக்டர் ஜி.எஸ்.சுரேஷா ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை -கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.ஹேமபிரபா இதுகுறித்து கூறுகையில், இந்த கரும்பு ஜாமானது, கரும்புச்சாற்றின் ஊட்டச்சத்தையும், சுவையையும் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரொட்டி, சப்பாத்தி, இட்லி, தோசை மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்களுடன் இதனை பயன்படுத்தலாம் எனவும், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு இதை தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கரும்பு விவசாயிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் வேர் புழுக்களை (White grub) கட்டுப்படுத்த, இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘பூச்சிக்கொல்லி நூற்புழு கலவை’ ஒர் ‘உயிர் பூச்சிக்கொல்லியாக’ பயன்படும் என்று குறிப்பிட்ட அவர், இந்த மருந்தினை கரும்பு வயல்களில் எளிதாக பயன்படுத்தலாம் என்றார். இதன் தொழில்நுட்ப உரிமம் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆர்வமுள்ள நிறுவனங்கள், இயக்குனர், ICAR-கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், கோயம்புத்தூர் - 641007 என்ற முகவரியில் , விவரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter