கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி.!!

தரமான மக்காச்சோளத்தின்‌ பண்ணை விலையானது மார்ச்‌ முதல்‌ மே 2022-ல்‌ குவிண்டாலுக்கு ரூ.2300 முதல்‌ ரூ.2400 ஆக இருக்கும்‌.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்திட்டமானது, மக்காச்சோளத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வேளாண்‌ மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ இரண்டாவது (முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ மக்காச்சோளமானது இந்தியாவில்‌ கிட்டத்தட்ட 9.5 மில்லியன்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 32.4 மில்லியன்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படும்‌ என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்‌ மகாராஸ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, பீகார்‌, தெலுங்கானா மற்றும்‌ ஆந்திரப்பிரதேசம்‌ ஆகிய மாநிலங்கள்‌ மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன.

இந்தியா மக்காச்சோளத்தை அண்டை நாடுகளான மியான்மர்‌, நேபாளம்‌, பங்களாதேசம்‌ மற்றும்‌ பூட்டான்‌ போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவும்‌ போர்‌ நெருக்கடிகள்‌ காரணமாக, குறிப்பாக வியட்நாம்‌ மற்றும்‌ மலேசியாவிற்கு இந்திய மக்காச்சோளத்திற்கான ஏற்றுமதி தேவை அதிகரித்து வருகிறது. மேலும்‌ அதிகரிக்கும்‌ எரிபொருள்‌ செலவு காரணமாக, இதர மாநிலங்களிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்‌ மக்காச்சோளத்தின்‌ போக்குவரத்து செலவும்‌ அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில்‌ 2019-20-ஆம்‌ ஆண்டில்‌ 0.34 மில்லியன்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ 2.47 மில்லியன்‌ டன்கள்‌ மக்காச்சோளம்‌ உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில்‌ பெரம்பலூர்‌, அரியலூர்‌ சேலம்‌, திண்டுக்கல்‌, நாமக்கல்‌, புதுக்கோட்டை, திருப்பூர்‌ மற்றும்‌ விழுப்புரம்‌ ஆகிய மாவட்டங்களில்‌ அதிகளவில்‌ மக்காச்சோளம்‌ பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின்‌ படி, தமிழகத்தில்‌ மக்காச்சோள வரத்தானது மக்காச்சோளம்‌ உற்பத்தி செய்யும்‌ பகுதிகளிலிருந்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில்‌ வடகிழக்கு பருவமழை தாமதமானதால், முக்கியமாக சித்ரதுர்கா மற்றும்‌ தாவாங்கர பகுதிகளில்‌ மக்காச்சோள விளைச்சல்‌ கணிசமாக பாதிக்கப்பட்டு சந்தை வரத்து குறைந்துள்ளது. இதுவே நடப்பு பருவத்தில்‌ மக்காச்சோளத்தின்‌ விலை அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்‌ நிலவிய மக்காச்சோளம்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின்‌ அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின்‌ பண்ணை விலையானது மார்ச்‌ முதல்‌ மே 2022-ல்‌ குவிண்டாலுக்கு ரூ.2300 முதல்‌ ரூ.2400 ஆக இருக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய ஆலோசனையின்‌ அடிப்படையில்‌ சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

௮) உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல் மையம்‌

வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்- 641 003.

தொலைப்பேசி- 0422-2431405

ஆ) இயக்குனர்‌ மற்றும்‌ முனை அதிகாரி

தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல்‌ திட்டம்‌

நீர்‌ தொழில்நுட்ப மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்- 641 003.

தொலைப்பேசி- 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

சிறுதானிய துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்‌- 641 003.

தொலைப்பேசி எண்‌- 0422-2450507

Newsletter