கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில் நவீன வேளாண் தகவல் பரிமாற்ற வழிமுறைகள் குறித்து ஊரக இளைஞர்களுக்கான பயிலரங்கம்..!

விழா நிறைவாக, பயிலரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ 11015 கரும்பு இரகத்தின் விதைக்கரணைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில், 'நவீன வேளாண் தகவல் பரிமாற்ற வழிமுறைகள்' என்ற தலைப்பில் ஊரக இளைஞர்களுக்கான பயிலரங்கினை விழுப்புரம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை வளாகத்தில் 10.3.2022 அன்று நடைபெற்றது.



விழாவில் துவக்கவுரை ஆற்றிய இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் முனைவர். சிப்நாத் தேவ் அவர்கள் பேசுகையில் வேளாண் தகவல் பரிமாற்றத்திற்கு கிராமப்புறங்களில் இணைய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். தகவல் தொடர்பு தொழில்நுட்ப அணுகல் மற்றும் டிஜிட்டல் திறமையை மேம்படுத்துவது கரும்பு விவசாய தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும், என்றார்.



துவக்க உரை ஆற்றிய கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குனர், முனைவர் ஜி. ஹேமப்ரபா அவர்கள், 1912ம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்த ஆராய்ச்சி நிறுவனம் கரும்பு விவசாய தகவல் பரிமாற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்களை வரிசைப்படுத்தி பேசினார்.

விவசாயிகள், விவசாயம் செய்வதோடு திருப்தி அடையாமல் தொழில் முனைவோராக முயற்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை, சிவகங்கை மற்றும் ஆப்பக்கூடல் சக்தி சுகர்ஸ் சர்க்கரை ஆலைகள் மற்றும் தரணி ஆலைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளரும், கரும்பு இனப்பெருக்க நிறுவன முதன்மை விஞ்ஞானியுமான முனைவர். து. புத்திர பிரதாப் அவர்கள் பேசுகையில், இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்ட ஆராய்ச்சித் திட்டத்தின் ஒருபகுதியாக இப்பயிலரங்கு நடைபெறுவதாக குறிப்பிட்டார்.



கரும்பு விவசாயத்தில் ஈடுபடும் 35 வயதிற்குட்பட்ட விவசாயிகளிடையே, தமிழ்நாட்டின் 6 பின் தங்கிய மாவட்டங்களில், விழுப்புரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும், ஏனைய மாவட்டங்களில், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், இந்த ஆராய்ச்சித் திட்டம் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இளைஞர்கள், விவசாயத்தில் ஆர்வமுடன் ஈடுபட நவீன ஊடகங்கள் உதவி புரியும் என்று குறிப்பிட்டார்.

கரும்பு விவசாயத்தில் நவீன ஊடகங்கள் மூலமான தகவல் பரிமாற்றத்தினை 1998லேயே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வார்னாவில், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் துவக்கியதாக குறிப்பிட்ட அவர், முண்டியம்பாக்கம் மற்றும் செம்மேடு ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை சேர்ந்த இளம் கரும்பு விவசாயிகள் நேரடியாகவும், சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலையை சேர்ந்த இளம் கரும்பு விவசாயிகள் இணைய வழியாகவும் இப்பயிலரங்கில் பங்கேற்றதாக தெரிவித்தார்.



ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையின் சார்பாக ஜி.என்.ரெங்கநாதன், தலைவர் (விரிவாக்கம்), மற்றும் முனைவர் எஸ்.ஜெயராம், துணைப் பொது மேலாளர் ஆகியோரும், சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலை சார்பாக ஜே.உத்தண்டி ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினர்.

இந்தப் பயிலரங்கின் தொழில்நுட்ப அமர்வில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மாநில அரசின் வேளாண்மைத் துறை, ஐசிஏஆர்-கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மித்ரா அறக்கட்டளை ஆகியவற்றின் வல்லுநர்கள் நடத்தினர்.

இதையடுத்து நிறைவாக, "விவசாயி-வளர்ச்சி பணியாளர்கள்-விஞ்ஞானி" கலந்துரையாடல் நடைபெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ 11015 கரும்பு இரகத்தின் விதைக்கரணைகள் வழங்கப்பட்டன.

Newsletter