தமிழ்நாடு வேளாண் ஆய்வு மூலம் சூர்யகாந்தி விதையின் விலை முன்னறிவிப்பு

இந்தியாவில், எண்ணெய் வித்து பயிர்களில் சூர்யகாந்தி முக்கியமானதாகும். அமொரிக்க ஐக்கிய நாடுகள் வேளாண்துறை (USDA) அறிக்கையின் படி, இந்தியாவில் 2015-16 ஆம் ஆண்டில் சூரியகாந்தி 5.5 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 3.2 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவின் எண்ணெய் பிழிதல் (SEAI) அமைப்பின்படி, சென்ற கரீப் பருவத்தை விட தற்போது 0.62 லட்சம் எக்டர்கள் கூடுதலாக சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2014-15 ஆம் ஆண்டில் சூரியகாந்தி 9,000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 13,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் திருச்சி ஆகியவை சூரியகாந்தி பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும். சூரியகாந்தி விதைகள் எண்ணெய்க்காக உபயோகப்படுத்தப்பட்டாலும் அவை உணவுப் பதார்த்தங்கள், கோழி மற்றும் மாட்டுத் தீவனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

SEAI-யின்படி 2015-16 ஆம் ஆண்டில் இந்தியா 96.69 லட்சம் டன்கள் உணவு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. உக்ரைன், இந்தியாவிற்கு சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் தனிப்பெரும் நாடாக உள்ளது. ஏப்ரல் 2015 முதல் செப்டம்பர் 2016 வரை, இந்தியா USD  201 கோடிகளுக்கு சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. சென்னைத் துறைமுகம் வாயிலாக 32.4 சதவிகிதம் சூரியகாந்தி  எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றது. வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டில், கரூர், வேடசந்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் சூரியகாந்தி உற்பத்தி குறைந்துள்ளது. எனினும், திருச்சி மற்றும் துறையூரில் வரும் மாதங்களில் மழை வரும் என எதிர்பார்க்கப்படுவதால் சூரியகாந்தியின் பரப்பளவு அதிகரித்துள்ளது.   

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 16 ஆண்டுகளாக வெள்ளகோயில் சந்தையில் நிலவிய சூரியகாந்தி விதையின் விலையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்பு திட்டம், சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான சூரியகாந்தி விதையின் பண்ணைவிலை அக்டோபர் - நவம்பர், 2016 மாதங்களில் குவிண்டாலுக்கு ரூ. 3,200-3,300 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Newsletter