கோவையில் மக்காச்சோள படைப்புழு மேலாண்மை கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ மாநில அளவில்‌ உழவர்களுக்கான மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்‌ பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ மாநில அளவில்‌ உழவர்களுக்கான மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்‌ பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.

இந்தியாவில்‌ படைப்புழுக்களின்‌ தாக்கம்‌ 2018 ஜூலைமாதம்‌ தொடங்கி கர்நாடகம்‌ தமிழ்நாடு, மகாராஷ்டிரம்‌, ஆந்திரா ஆகிய மாநிலங்களில்‌ பெரிய அளவில்‌ பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கோரிக்கைக்கு இணங்கி, தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி உதவியுடன்‌, படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான மேம்பட்ட ஆய்வுகளை முன்னெடுத்து செல்ல பரிந்துரைத்தது. இதன்‌ பலனாக ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ ஆய்வு செய்து, மாநில மக்காச்சோள உழவர்களுக்கு வழங்கியது.



இதற்கான மாநில அளவிலான உழவர்கள்‌ கருத்தரங்கு 28.12.2021 அன்று, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூரில்‌ நடைபெற்றது. வரவேற்புரை ஆற்றிய பூச்சியியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ இத்திட்டத்தின்‌ செயல்பாடுகளை விவரித்தார்‌. இதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்‌, தமிழகம்‌ முழுவதும்‌ எவ்வாறு ஆய்வு செய்து செயல்படுத்தப்பட்டன என்று விளக்கிக்‌ கூறி, உழவர்கள்‌ மற்றும்‌ வேளாண்‌ துறை அலுவலர்கள்‌ அனைவரையும்‌ வரவேற்றார்‌.



இவ்விழாவில்‌ தலைமை உரையாற்றிய, கோயமுத்தூர்‌ வேளாண்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதல்வர்‌, முனைவர் கல்யாணசுந்தரம்‌, இத்திட்டத்தினை விவசாயிகள்‌ பங்களிப்போடு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்‌ எவ்வாறு முன்னெடுத்துச்‌ சென்றது என்பதை விளக்கிக்‌ கூறினார்‌. மேலும்‌, கோயம்புத்தூர்‌ மட்டுமல்லாது அதன்‌ உறுப்பு கல்லூரிகளான மதுரை, திருச்சி, கிள்ளிகுளம்‌, வாழவச்சனூர்‌ ஆகிய கல்லூரிகளிலும்‌, தமிழ்நாடு முழுவதும்‌ அமைந்துள்ள அறிவியல்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ வேளாண்‌ அறிவியல்‌ மையங்களில்‌ எவ்வாறு வயல்வெளி ஆராய்ச்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டன என்று விளக்கிக்‌ கூறினார்‌.

இத்திட்டத்தின்‌ முதன்மை விஞ்ஞானி திருவண்ணாமலை வேளாண்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சிநிலைய முதன்மையர்‌ முனைவர்‌ முத்துக்கிருஷ்ணன்‌ படைப்புழுக்களை கட்டுப்படுத்த, சீர்‌ செய்யப்பட்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை பற்றி அவர்களுக்கு விளக்கிக்‌ கூறினார்‌. பயிர்‌ பாதுகாப்பு மைய இயக்குனர்‌ முனைவர்‌ கு.பிரபாகர்‌ படைப்புழுக்களை கட்டுப்படுத்தும்‌ ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை எடுத்துரைத்தார்‌.

முக்கியமாக மக்காச்சோள படைப்புழுக்களுக்கான பொருளாதார சேத நிலை, இதன்‌ அடையாளங்கள்‌, பாதிப்புகளை கண்டறியும்‌ முறை, ஒட்டுண்ணிகள்‌ அல்லது இரை விழுங்கிகளை கொண்டு எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்‌, உயிர்கொல்லிகள்‌, பாக்டீரியா, வைரஸ்‌, மற்றும்‌ பூஞ்சாணக்‌ கொல்லிகள்‌ உள்ளனவா, இவற்றின்‌ மூலம்‌ கட்டுபடுத்துவது எப்படி ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார்‌.



இவ்விழாவில்‌, ஆராய்ச்சி இயக்குநர்‌, முனைவர்‌ கீ.செ. சுப்ரமணியன்‌, விரிவாக்கக்‌ கல்வி இயக்கக இயக்குனர்‌, முனைவர்‌ மு. ஜவகர்லால்‌, திருவண்ணாமலை வேளாண்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதன்மையர்‌ முனைவர்‌ முத்துக்கிருஷ்ணன்‌, கோயமுத்தூர்‌ வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதன்மையர்‌ முனைவர்‌ ப. ஸ்ரீதர்‌, ஆகியோர்‌ சிறப்புரையாற்றினார்கள்‌.

முன்னதாக, கோயம்புத்தூர்‌ வேளாண்‌ இணை இயக்குனர்‌ சித்ராதேவி, திருப்பூர்‌ வேளாண்‌ இணை இயக்குனர்‌, மனோகரன்‌, ஈரோடு வேளாண்‌ இணை இயக்குனர்‌ சின்னசாமி, நாமக்கல்‌ வேளாண்‌ இணை இயக்குனர்‌ அசோகன்‌ ஆகியோர்‌ வாழ்த்துரை வழங்கினார்கள்‌.

இந்நிகழ்வில்‌ உழவர்களுக்கு, படைப்புழுக்களை கட்டுப்படுத்த, ஆளில்லா வானூர்தி மூலம்‌ இடுபொருட்களை தெளித்தல்‌, விதை நேர்த்தி செய்தல்‌ மற்றும்‌ உயிரியல்‌ காரணிகளை வயலில்‌ உபயோகப்படுத்தும்‌ முறைகள்‌ ஆகியவை குறித்த செயல்‌ விளக்கங்களை முனைவர்‌ ஜெகந்நாதன்‌, உதவிப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ அ.சுகந்தி மற்றும்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ சு.ஜெயராணி ஆகியோர்‌ விளக்கினர்‌. இறுதியாக, பேராசிரியர்‌ வெ. பாலசுப்பிரமணி நன்றி உரையாற்றினார்‌. இந்த மாநில அளவிலான உழவர்கள்‌ கருத்தரங்கில்‌ 580-க்கும்‌ மேற்பட்ட உழவர்கள்‌ கலந்துகொண்டு பயன்‌ பெற்றனர்‌.

Newsletter