பொள்ளாச்சியில் தென்னை வேர்வாடல் நோய் மேலாண்மை விழிப்புணர்வு!

தென்னை வேர்வாடல் நோய் மேலாண்மை விழிப்புணர்வு மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக நுண்ணுயிரி கலவை வெளியீட்டு விழா பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அரங்கில்‌ நடைபெற்றது.


கோவை :தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பயிர்‌ நோயியல்‌ துறை மற்றும்‌ ஆழியாறு‌ தென்னை ஆராய்ச்சி நிலையமும்‌ இணைந்து நடத்திய தென்னை வேர்வாடல்‌ நோய்‌ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்‌ கழக கோகோகான்‌ (TNAU-COCOCON) என்ற நுண்ணுயிரி கலவை வெளியீட்டு விழா பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அரங்கில்‌ நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ.குமார்‌‌, நுண்ணுயிரி கலவையை வெளியிட்டு விழாவிற்குத் தலைமை தாங்கினார்‌. அவர்‌ தமது தலைமையுரையில்‌ தென்னையின்‌ நீடித்த தன்மைக்குச் சவாலாக விளங்கும்‌ கேரளா வாடல்‌ நோயை மேலாணர்மை செய்திட நுண்ணுயிர்‌ கலவையின்‌ பங்களிப்பை விளக்கினார்‌.

வாடல்‌ நோய்‌ பாதிப்புக்குள்ளான மரங்களிலும்‌ நுண்ணுயிரிகள்‌ வேர்‌ வழியாகத் தண்டு மற்றும்‌ இலைப்பகுதிகளுக்கு ஊடுருவிச்சென்று மரங்கள்‌ மீட்சி பெற உதவுகின்றன என்றார்‌. உழவர்கள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக கோகோகான்‌ நுண்ணுயிரி கலவையை ஒருங்கிணைந்த நோய்‌ மேலாண்மை முறையில்‌ பரிந்துரைப்படி பயன்படுத்திப் பயன்பெற வேண்டும்‌ என்று வேண்டுகோள்‌ விடுத்தார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பயிர்‌ பாதுகாப்பு மைய இயக்குநர்‌ முனைவர்‌.கு.பிரபாகர்‌ தமது தொழில்நுட்ப உரையில்‌, வேர்வாடல் நோயை அதிகரிக்கும்‌ காரணிகளான ஊட்டச்சத்து பற்றாக்குறைகளைத் தவிர்த்து தென்னைக்கு நோய்‌ எதிர்ப்புத்திறனை அதிகரிக்க வேண்டும்‌ என்றார்‌. கோவை, வேளாண்மை இணை இயக்குநர்‌ இரா.சித்ராதேவி தமது வாழ்த்துரையில்‌ தென்னை வேர்‌ வாடல்‌ நோய்‌ மேலாண்மையில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பங்களிப்பை எடுத்துரைத்தார்‌.

மேலும்‌ அறிகுறிகள்‌ தென்படும்‌ ஆரம்ப நிலையிலேயே மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்‌ எனறார்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்‌ ஆ.கிருஷ்ணசாமி கவுண்டர்‌ மற்றும்‌ தி.சேதுபதி வேர்வாடல்‌ நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு உழவர்களிடையய அதிகரிக்க வேண்டும்‌ என்றும்‌ தென்னை ஆராய்ச்சியாளர்களை உழவர்கள்‌ சிறந்த முறையில்‌ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌ என்று கேட்டுக்கொண்டார்கள்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக முன்னாள்‌ மேலாண்மைக்குழு உறுப்பினா்‌ O.V.R.சோமசுந்தரம்‌ தமது சிறப்புரையில்‌ இரசாயனங்களின்‌ பங்களிப்பைத் தவிர்த்து உயிரியல்‌ முறையில்‌ நோயை அணுக வேண்டும்‌ என்றார்‌. நுண்ணுயிரி கலவை கொண்டு வேர்வாடல்‌ நோய்‌ மேலாண்மை குறித்த செயல் விளக்கத்‌ திடல்கள்‌ அமையப்பெற்ற உழவர்களான தப்பட்டைக்கிழவன்‌ புதூர்‌ பாலதண்டாயுதபாணி மற்றும்‌ காளியப்பக்கவுண்டன்‌ புதூரைச்சார்ந்த வரதராஜன்‌ மேலாண்மை முறைகளின்‌ தாக்கம்‌ குறித்த தங்கள்‌ கருத்துகளைப் பதிவு செய்தனர்‌.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக கோகோகான்‌ நுண்ணுயிர்‌ கலவையின்‌ பயன்பாடு குறித்த காணொளிக்‌ காட்சியும்‌, அதைத்தொடர்ந்து “வேர்வாடல்‌ நோய்‌ - இன்றைய நிலை மற்றும்‌ மேலாண்மை” என்ற தலைப்பில்‌ காணொளிக்காட்சியும்‌ நடத்தப்பட்டது. அப்பொழுது வேர்வாடல்‌ நோய்‌ பாதிக்கப்பட்ட மரங்கள்‌ நுண்ணுயிரிகளின்‌ செயல்திறனைத் தகுந்த ஆதாரங்கள்‌ வாயிலாக விளக்கப்பட்டது.

கோவை தோட்டக்கலை கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதல்வர்‌ முனைவர்‌ இல.புகழேந்தி உழவர்களிடம்‌ கலந்துரையாடினார்‌. கோயம்புத்தூர்‌ தோட்டகலைக்கல்லூர் மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய, நறுமண மற்றும்‌ மலைத்தோட்ட பயிர்கள்‌ துறையின்‌ தலைவர்‌ முனைவர்‌. ௧. வெங்கடேசன்‌ அவர்களும்‌ ஆழியாறு‌ தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ சு. பிரணீதா அவர்களும்‌ இவ்விழாவில்‌ பங்கேற்றனர்‌.

இவ்விழாவிற்கு பயிர் நோயியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌. கா. கார்த்திகேயன்‌ அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார்‌. நிறைவாகக் கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக பயிர்‌ நோயியல்‌ துறை பேராசிரியர்‌ முனைவர்‌ சே. நக்கீரன்‌ அவர்கள்‌ நன்றி நவிலந்தார்‌. இவ்விழாவில்‌ பொள்ளாச்சி மற்றும்‌ அதன்‌ சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த 100க்கும்‌ மேற்பட்ட தென்னை விவசாயிகள்‌ பங்குபெற்றனர்‌.

Newsletter