தண்ணீர் பற்றாக்குறை: பூக்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம்

தண்ணீர் பற்றாக்குறையால் பூக்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான செந்தாரப்பட்டி, கூடமலை, கெங்கவல்லி, கொண்டயம்பள்ளி, மண்மலை, வாழக்கோம்பை, ஜங்கமசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தற்போது சிறுவயல்களில் கோழிக்கொண்டை, சாமந்திப்பூ போன்றவற்றை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால், விவசாயிகள் தாங்கள் வழக்கமாக பயிரிடும் பயிர்களை பயிரிடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால், வெறுமனே இருந்துவரும் வயல்களில் சாமந்தி, செண்டுமல்லி, கலர் பூ, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் வகைகளை பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து பூ விவசாயிகள் கூறியது: தற்போது கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் ஒரு கிலோ ரூ.30 முதல் 40 வரை விலைபோகிறது. அன்றாட வீட்டுச் செலவுகளுக்கு பூக்கள் மூலம் வரும் வருவாய் போதுமானதாக உள்ளது என்றனர்.

Newsletter