பொள்ளாச்சிக்கு வந்த 1300-மெட்ரிக் டன் உர மூட்டைகள் வேளாண் மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்.!!

தமிழகத்தில் பருவ மழை எதிரொலியால், விவசாயப் பணிகளுக்காக கூட்ஸ் ரயிலில் பொள்ளாச்சிக்கு வந்த1300-மெட்ரிக் டன் தழைச்சத்து உர மூட்டைகள் வேளாண் மையங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: தமிழகத்தில் பருவ மழை எதிரொலி விவசாயப் பணிகளுக்காக கூட்ஸ் ரயிலில் பொள்ளாச்சிக்கு வந்த1300-மெட்ரிக் டன் தழைச்சத்து உர மூட்டைகள் வேளாண் மையங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதால் தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயத்திற்குத் தேவையான தழைச்சத்து IFFO உர மூட்டைகள் இன்று கூட்ஸ் ரயில் மூலம் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. உர மூட்டைகளை லாரிகள் மூலம் கூட்டுறவு வேளாண் மையங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மூட்டைகள் ஓமன் நாட்டிலிருந்து கப்பல் மூலம் காரைக்குடி துறைமுகத்திற்கு வந்தது. அங்கிருந்து 1300-மெட்ரிக் டன் உர மூட்டைகள் 21-கூட்ஸ் ரயில் பெட்டிகளில் நிரப்பி சுமார் 29,000-மூட்டைகள் இன்று பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது.



இதனை நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் அதிகாரிகள் பகிர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருவதாகவும், ஆயிரம் மெட்ரிக் டன் வேளாண் கூட்டுறவு மையங்களுக்கும் 300-மெட்ரிக் டன் உர மூட்டைகள் தனியார் உர விற்பனை நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும் என்றும் மேலும் உலகின் முதல் நானோ உரம் எனப்படும் நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மண் மற்றும் நீர் மாசடையாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மகசூலை அதிகரிக்கும் இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்து அளிக்கும் நானோ யூரியா திரவமும் இதனுடன் சேர்த்து அனுப்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter