தக்காளிக்கு அதிகரிக்கும் மவுசு; வரத்துக் குறைவால் கிணத்துக்கடவில் ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ரூ.250 க்கு விற்பனை; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

கிணத்துக்கடவுப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதோடு தக்காளி வரத்து குறைந்துள்ளது. மேலும் ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ரூ.250 க்கு விற்பனையாவதில் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது.

குறிப்பாக கிணத்துக்கடவுப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி விளைச்சலை அதிகளவில் விவசாயிகள் மேற்கொண்டுவரக்கூடிய நிலையில், அறுவடை சமயத்தில் விவசாயிகள் பாதிப்பினைச் சந்தித்தன. மேலும் தக்காளிகள் செடியிலேயே அழுகும் நிலையும் ஏற்பட்டது. இதனால் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் குறைந்துள்ளது. இந்த வரத்துக்குறைவு தான் விவசாயிகளுக்கு தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் கிணத்துக்கடவுப் பகுதியில் உற்பத்தியாகும் தக்காளிகளை விவசாயிகள் பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தையில் வைத்து ஏலம் விடுவது வழக்கம். நாளொன்றுக்கு கிணத்துக்கடவு தினசரி சந்தைக்கு பத்தாயிரம் பெட்டி தக்காளிகள் ஏலத்திற்காக வரும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக 2,500 பெட்டி நாட்டு தக்காளி மட்டுமே வரத்து இருந்தது.



இதனால் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டு தக்காளியின் விலை 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை இன்று ஏலம் போனது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெட்டி நாட்டு தக்காளி 150 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போன நிலையில் தற்போது 100 ரூபாயை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி என்பது சமையலில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய உணவுப்பொருள் என்பதால் என்ன விலை என்றாலும் மக்கள் வாங்கித்தான் ஆக வேண்டும். தற்போது மழையின் காரணமாக கிணத்துக்கடவு பகுதியில் தக்காளிக்கு இன்று மவுசு கூடியுள்ளது.

Newsletter