உலர் களம் இல்லாததால் வீணாகும் எள்: இழப்பைச் சந்திக்கும் விவசாயிகள்

உலர் களங்கள் போதிய அளவில் இல்லாததால் சாலையில் எள் செடிகளை கதிரடிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் எள் வீணாகி இழப்பைச் சந்திக்கும் நிலை உள்ளது.

டெல்டா மாவட்டமான கடலூரில் குறுவை சாகுபடியை முடித்த விவசாயிகள் எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதன்படி மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரம் ஏக்கரில் எள் பயிரிடப்பட்டது. 3 மாதப் பயிரான எள்ளுக்கான அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. இதையடுத்து எள் மூட்டைகள் விற்பனைக்காக விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வருகிறது.
 
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு எள் விற்பனைக் கூடத்துக்கு வரவில்லையென கூறப்படுகிறது. அதிகமான பரப்பளவில் எள் பயிரிடப்பட்டபோதிலும், அதனை கதிரடித்து எள்ளை பிரிக்கக் கூடிய களங்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததே இதற்குக் காரணமென விவசாயிகள் கூறுகின்றனர்.

எள் செடிகளை அறுவடை செய்யும் விவசாயிகள் அதனை கதிரடிப்பதற்காக சாலையில் கொட்டி வைக்கின்றனர். சாலையில் செல்லும் வாகனங்கள் எள் செடியின் மீது ஏறிச் செல்வதால் அதிலிருந்து கீழே விழும் எள்ளினை பின்னர் சேகரித்து அதனையே தங்களது வரவாக விவசாயிகள் வைத்துக் கொள்ள முடிகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான பொருளாதார இழப்புக்கு உள்ளாகின்றனர்.

ஏனெனில் சாலையில் வைக்கப்படும் எள் செடியிலிருந்து கீழே சிதறும் எள்ளில் 25 சதவீதத்தை விவசாயிகளால் சேகரிக்க முடியாது. இதனால் அவை வீணாகி பொருளாதார நஷ்டம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் கிராமங்களில் போதுமான உலர் களங்கள் அமைக்கப்படாததோடு, அவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதே என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
இதுகுறித்து விருத்தாசலம் அருகே உள்ள கண்டப்பங்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி மா.தினேஷ்குமார் கூறுகையில், ஒரு ஏக்கரில் 200 கிலோ எள் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். தற்போது 100 கிலோ எள் மூட்டை ரூ.6,700 வரை விலை போகிறது. 3 மாத பயிருக்கு வயலை சீர்செய்தல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்றவற்றுக்கே அதிகம் செலவிடுகிறோம். போதுமான கதிரடிக்கும் களங்கள் இல்லாததால் சாலையில் கொட்டி கதிரடிக்க வேண்டிய நிலை உள்ளது. கதிரடிக்கும் போது சிதறும் எள்ளின் பெரும்பகுதியை எங்களால் சேகரிக்க முடியாது. இதனால் அதிக நஷ்டத்துக்கு உள்ளாகிறோம்.

எங்கள் ஊரில் உள்ள களத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுபோன்ற நிலையே பல கிராமங்களில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் கதிரடிக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு, ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெ.ஹரிதாஸ் கூறுகையில், களங்கள் அமைப்பது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் பணியாகும். 3 சென்ட் நிலம் தரிசாகவோ அல்லது புறம்போக்காகவோ இருந்தால் அதில் களம் அமைக்க விவசாயிகள் பரிந்துரைக்கலாம். மேலும், களங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கை முழுக்க முழுக்க அந்தந்த கிராம பஞ்சாயத்துகளின் வசமே உள்ளது. அவர்களே களம் அமைத்துக் கொள்வதோடு, ஆக்கிரமிப்புகள் மீதும் கவனம் செலுத்தி மீட்கலாம். எனினும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Newsletter