ஆனைமலையில் நெல் வயல்களை சேதப்படுத்தும் எலிகள்: விளைச்சல் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை..!

கோவை: ஆனைமலை கரவெளி பகுதியில் இந்த ஆண்டிற்கான முதல் போக நெல்சாகுபடி தொடங்கப்பட்டு நெற்பயிரில் கதிர்விடத் தொடங்கி உள்ளன.


கோவை: ஆனைமலை கரவெளி பகுதியில் இந்த ஆண்டிற்கான முதல் போக நெல்சாகுபடி தொடங்கப்பட்டு நெற்பயிரில் கதிர்விடத் தொடங்கி உள்ளன.

இந்தநிலையில், நெல் வயல்களை எலிகள் சேதப்படுத்துவதால், விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் ஆனைமலை ரமட முதலிபுதூர், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனைமலை கரவெளி பகுதியில் இந்த ஆண்டிற்கான முதல் போக நெல்சாகுபடி தொடங்கப்பட்டு, நெற்பயிரில் கதிர்விடத் தொடங்கி உள்ளன. இந்தநிலையில், நெல் பயிர்களின், தண்டுப் பகுதியை எலிகள் கடித்து நாசம் செய்ய வருகின்றது.



இதனால் மகசூல் குறைவதைத் தவிர்க்க, விவசாயிகள் வயல்வரப்புகளில் உள்ள எலிகளைப் பிடித்து அழித்து வருகின்றனர்.

இதுகுறித்து பழைய ஆயக்கட்டு நெல் விவசாயிகள் கூறுகையில், ‘‘ஆனைமலை பழைய ஆயக்கட்டு பகுதியில், ஆழியாறு அணை பாசனத்தில் சுமார் 6,400 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பெய்து, அணையின் நீர் மட்டம் திருப்தியாக இருப்பதால், விவசாயிகள் தண்ணீர் பிரச்னையின்றி நெல் சாகுபடியை மேற்கொண்டு உள்ளோம். இந்த ஆண்டு வயல்களில் எலி தொல்லை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு வயலிலும் நூற்றுக்கணக்கான எலிகள், வரப்பிற்கு அடியில் சென்று, நெற்பயிர்களைக் கடித்து பாலை உறிஞ்சுகின்றன. இதனால் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக செலவழித்து கூலி ஆட்களை வைத்து எலி வளைகளை அழித்து எலிகளைப் பிடிக்க வேண்டி உள்ளது. எலித் தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுபட வேளாண்துறையினர் தொழில்நுட்பங்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

Newsletter