பாரம்பரிய கால்நடைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 15-ந்தேதி காங்கேயம் கால்நடைத் திருவிழா: சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

கோவை: பாரம்பரிய கால்நடைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக வரும் 15-ந்தேதி காங்கேயம் கால்நடைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.


கோவை: பாரம்பரிய கால்நடைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக வரும் 15-ந்தேதி காங்கேயம் கால்நடைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மற்றும் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் காங்கேயம் கால்நடைத் திருவிழா வரும் 15-ந்தேதி காங்கேயம் நத்தக்காடையூர் சாலையில் உள்ள முள்ளிபுரத்தில் நடக்கிறது.

கால்நடைத் திருவிழாவையொட்டி மேடைகள், வரவேற்பு பந்தல்கள் என பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இயற்கையின் மீதும் பாரம்பரிய கால்நடைகள் மீதும் ஆரம்பம் முதலே மிகுந்த ஈடுபாடு கொண்டு அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருகிறோம். மேலும் சுற்றுச்சூழலைக் காக்கும் பொருட்டு நிறைய நற்பணிகளைச் செய்து வருகிறோம். அந்தவகையில் அழிவின் விளிம்பிலிருந்து காங்கேயம் இனக்கால்நடைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் என்ற ஒன்றை ஆரம்பித்து காங்கேயம் காளைகளைப் பாதுகாத்து வருகிறோம். அதன் எண்ணிக்கை அதிகரிப்பிலும் மிக முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

இதன் தொடர்ச்சியாகப் பாரம்பரிய கால்நடைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும், அதை அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் விதமாகவும் `காங்கேயம் கால்நடைத்திருவிழா-2021' என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மற்றும் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளோம்.

மறைந்த தலைவர் கருணாநிதிதான் ஆசியாவிலேயே முதன்முதலாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் அமைத்தார். கால்நடைப் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்தார். அவர் வழியில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடத் தலைவர் மு.க.ஸ்டாலின் சீரிய சிந்தனையில் விளைந்த சுற்றுச்சூழல் அணி கால்நடை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

ஆகவே, இச்சிறப்பு வாய்ந்த நிகழ்வில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவுக்கு தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக வருகை தரவுள்ளார். விழாவில் பங்கேற்று கால்நடை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே சிறப்புரையாற்றுகிறார்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, கால்நடைத் திருவிழாவைக் காண பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவவரும் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter