ஆனைமலையில் வெள்ளை ஈ தாக்குதல்: பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடித்தால், 60 சதவீத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் - வேளாண்துறை

ஆனைமலையில் வெள்ளை ஈ தாக்குதல்: பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடித்தால், 60 சதவீத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் - வேளாண்துறை


கோவை: பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தென்னை, நெல் உள்ளிட்ட சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த சில ஆண்டுகளாக தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக, தேங்காய் மற்றும் இளநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. 

வெள்ளை ஈ தாக்குதலை எப்படி கட்டுப்படுத்துவது? 

தென்னை மரங்களை பாதிக்கும் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை மற்றும் தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் பல்வேறு வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். இதில், குறிப்பாக வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலித்தீன் கவர்களை தென்னை மரங்களுக்கு நடுவே கட்டிவைத்து, அதில் விளக்கெண்ணெய் தடவி ஈக்களை பிடிப்பது, அதிவேக தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை பீச்சி அடிப்பது, இறை விழுங்கிகள் மூலம் வெள்ளை ஈக்களை அழிப்பது, இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளை அமைத்து வெள்ளை ஈக்களை அழிப்பது உள்ளிட்ட முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு,செயல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வேளாண்துறை அறிவுரை மற்றும் பயிற்சியால் விவசாயியை பலன்..!

ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர், அங்கலக்குறிச்சி, காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேளாண் துறைஅதிகாரிகள் மூலம் வழங்கப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் தடுப்பு முறைகளை செயல்படுத்தி வருகின்றனர். 

விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடித்தால், 60 சதவீத வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் - வேளாண்துறை அதிகாரிகள்

இதுகுறித்து, ஆனைமலை வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில்,தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்ககளை கட்டுப்படுத்த, வேளாண்மைத்துறை சார்பில் இரண்டரை ஏக்கர் பரப்பளவுக்கு ரூ. 1,300 மதிப்பிலான மஞ்சள் நிற காகிதங்கள், கிரைப்சோபிர்லா இறை விழுங்கிகள், எண்ணெய் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும், அதிவேக தெளிப்பான் முறையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ரூ.1000 வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை, ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 8000 ஹெக்டர் பரப்பளவில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் இந்த பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடித்தால், 60 சதவீத தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும், என்று, தெரிவித்தனர்.

Newsletter