தென்னை சாகுபடி தொழில்நுட்ப சான்றிதழ் பயிற்சி வகுப்புகள்: பிப்ரவரி 8-ல் தொடக்கம்!

கோவை: தென்னை சாகுபடி தொழில்நுட்ப படிப்புக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் வரும் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்கவிருப்பதாக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்னை சாகுபடி தொழில்நுட்ப படிப்புக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் வரும் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்கவிருப்பதாக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திறந்தவெளி தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து விவசாயிகளுக்கான தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறி்த்து சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய அலுவலகத்தில் இந்தப் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. மாதம் ஒருமுறை முழுநாள் என ஆறு மாதத்துக்கு ஆறு நாட்கள் இந்த பயிற்சி நடக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தென்னை விவசாயத்தை அதிகம் கொண்டுள்ள பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், இளம் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், தென்னை சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைந்து இந்த தென்னை சாகுபடி குறித்த சான்றிதழ் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில், தென்னங்கன்று நடவு முறை, தென்னை நாற்றங்கால் பராமரிப்பு, நீர்ப் பாசன மேலாண்மை, உர மேலாண்மை, பல அடுக்கு ஊடு பயிர் சாகுபடி, நோய் மேலாண்மை, தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கான பயிற்சி, ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை உள்ளிட்ட பயிற்சிகள் வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

மாதம் ஒருமுறை என ஆறு மாத காலத்துக்கு நடக்கும் இந்தப் பயிற்சியில், பயிற்சி மற்றும் கையேடுக்கான தொகையாக ரூ. 2,560 செலுத்தி விவசாயிகள் விண்ணப்பங்களைப் பெற்று பயிற்சியில் கலந்து கொள்ளலாம். வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஆறு மாத காலம் பயிற்சி பெற்ற தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி காலம் நிறைவு பெற்றவுடன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter