ஒருங்கிணைந்த பண்ணை ஆரோக்கியப் பாதுகாப்பு திட்டம்: அரசின் முழு நிதியுதவி கிடைக்குமா?

நாட்டிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த பண்ணை ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டத்துக்கு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒருமித்த குரல் எழுப்பினால் மட்டுமே அரசின் நிதியுதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில், ஒருங்கிணைந்த பண்ணை ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தங்களிடமுள்ள கால்நடைகளைப் பதிவு செய்து கொள்ளும் விவசாயிகள், எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வங்கியில் செலுத்துகின்றனர்.

பதிவு செய்த விவசாயிகளின் கால்நடைகளுக்கு, தடுப்பூசி முதல் நோய் பாதிப்புகள் வரை, கால்நடை மருத்துவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக, கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவுதல், உயிரிழப்பு ஆகியன தவிர்க்கப்படுகின்றன.

அதைப் பின்பற்றி, இந்தியாவிலும் ஒருங்கிணைந்த பண்ணை ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூலம், முதல்கட்டமாக வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு மட்டும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளைப் போல், இங்குள்ள விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படவில்லை என்றும், அரசின் சார்பிலேயே கிசிச்சைக்கான மருந்துகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (திண்டுக்கல்) தலைவர் சௌ. சிவசீலனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் வெள்ளாடுகள் மற்றும் 7 லட்சம் செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆடுகளைப் பொருத்தவரை, நீல நாக்கு நோய், ஆள்கொல்லி நோய், துள்ளுமாரி நோய் ஆகிய 3 நோய்களுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி இடவேண்டும்.

இது தொடர்பான விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லாததால், ஆண்டுதோறும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழக்கின்றன. இதனால், விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.   மேலும், கருச்சிதைவு, தொண்டை அடைப்பான் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தொலைவில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டும் என்பதால், போக்குவரத்துப் பிரச்னையைக் கருதி தவிர்த்து விடுகின்றனர். இதற்குத் தீர்வு காணும் வகையிலேயே ஒருங்கிணைந்த பண்ணை ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.

விவசாயிகளின் வீடுகளுக்குச் செல்லும் கால்நடை மருத்துவர்கள், சிகிச்சைக்கான மருந்துகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 4 கட்டமாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், புதன்கிழமை (அக்.5) மீண்டும் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில், விவசாயிகள் முன் வைக்கும் கருத்துகளின் அடிப்படையிலேயே கட்டண வசூலிப்புக்குத் தீர்வு காணப்படும்.

ரூ.5 லட்சத்தில் ஆய்வுக் கூட வசதி

கால்நடை மருத்துவப் பல்லலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (திண்டுக்கல்) இதுவரை விவசாயிகளுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கால்நடைகளின் ரத்தம், சாணம், மூக்கு சளி, பிறப்பு உறுப்பு திரவம், பால், தோல், கண், புறம் மற்றும் அக ஒட்டுண்ணி, பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஆய்வகம் தொடங்க ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொலைவிலுள்ள கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்வற்கு நடமாடும் ஆய்வக வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக, மையத்தின் தலைவர் சௌ. சிவசீலன் தெரிவித்துள்ளார்.

Newsletter