தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்திற்கு ஜவஹர்லால்‌ நேரு விருது!

கோவை: தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ இந்தியாவின்‌ மதிப்புமிக்க விருதான ஜவஹர்லால்‌ நேரு விருதினை வென்றுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ இந்தியாவின்‌ மதிப்புமிக்க விருதான ஜவஹர்லால்‌ நேரு விருதினை வென்றுள்ளது.

இந்திய வேளாண்‌ துறை ஆராய்ச்சி குழுமத்தின்‌ (ICAR) மதிப்புமிக்க விருதான ஜவஹர்லால்‌ நேரு விருது, வேளாண்மை அறிவியலில்‌ சிறந்த முனைவர்‌ பட்டய ஆராய்ச்சி ஆய்வறிக்கைக்கு கடந்த 1969ம்‌ ஆண்டு முதல்‌ மத்திய அரசால்‌ ஆண்டுதோறும்‌ வழங்கப்பட்டு வருகிறது.

பயிர்‌ அறிவியல்‌, விலங்கு அறிவியல்‌, இயற்கை வள மேலாண்மை, பயிர்‌ பாதுகாப்பு, மீன்‌ வளம்‌, தோட்டக்கலை, வேளாண்‌ பொறியியல்‌, சமூக அறிவியல்‌ மற்றும்‌ உயிர்‌ தொழில்நுட்பவியல்‌ போன்ற 9 துறைகளில்‌ சிறந்த ஆராய்ச்சியாளர்களை தேர்ந்தெடுத்து, துறைக்கு 2 விருதுகள்‌ வீதம்‌ 18 விருதுகள்‌ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது ஆவணம்‌, சான்றிதழ்‌, தங்க முலாம்‌ பூசப்பட்ட வெள்ளிப்‌ பதக்கம்‌ மற்றும்‌ ரூ. 50,000/- ரொக்கம்‌ வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

இந்நிலையில்‌, 2019ம்‌ ஆண்டிற்கான விருதானது, இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமத்தின்‌ (ICAR) 92வது தொடக்க நாளான 16.07.2020 ௮ன்று காணொலி காட்சி மூலம்‌, மத்திய வேளாண்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை அமைச்சர்‌ நரேந்திர சிங் தோமர்‌ தலைமையில்‌, மத்திய வேளாண்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ நலத் துறை சார்‌ அமைச்சர்கள், புருஷோத்தம்‌ ரூபலா, கைலாஷ் செளத்ரி, செயலாளர்‌ (DARE) மற்றும்‌ இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமத்தின்‌ தலைமை இயக்குனருமான முனைவர்‌. திரிலோசன்‌ மொஹபத்ரா மற்றும்‌ உறுப்பினர்கள்‌ முதன்மையில்‌ அறிவிக்கப்பட்டது.

கோயமுத்தூர்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ முனைவர்‌ சே. நக்கீரன்‌, பேராசிரியர்‌ அவர்களை ஆலோசனைக்‌ குழு தலைவராக ஏற்றுக்‌ கொண்டு பயின்ற முனைவர்‌ வினோத்குமார்‌ செல்வராஜ்‌ அவர்களின்‌ பருத்தியில்‌ புகையிலை கீரல்‌ நச்சுயிரி நோய்‌ தொற்று : அதன்‌ அறிகுறிகள்‌, வெளிப்பாடு, பரவும்‌ முறை மற்றும்‌ மேலாண்மைக்கான ஆய்வறிக்கைக்காக இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி குழுமத்தின்‌ (ICAR) மதிப்புமிக்க விருதான ஜவஹர்லால்‌ நேரு விருதினைப்‌ பெற்றுள்ளது.



மேலும்‌ முனைவர்‌, வினோத்குமார்‌ செல்வராஜ்‌ சர்வதேச இதழ்களில்‌ தனது இரண்டு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்‌.

ஜவஹர்லால்‌ நேரு விருது பெற்ற முனைவர்‌, வினோத்குமார்‌ செல்வராஜ்‌ அவர்களை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ அவர்கள்‌ பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்‌.

Newsletter