விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்


மூன்றாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து.

விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் கயானா வருமாறு அந்த நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அழைப்பு விடுத்துள்ளார்.

மூன்றாம் உலகப் பொருளாதார மாநாடு சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அக்டோபர் 5 வரை 4 நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை உலகத் தமிழ் பொருளாதார நிறுவனம், சென்னை வளர்ச்சிக் கழகம் நடத்துகின்றன.

இதைத் தொடக்கிவைத்து மோசஸ் வீராசாமி நாகமுத்து பேசியது:- கயானாவில் எரிவாயு, நிலக்கரி எடுத்தல், நீர்மின் திட்டத்தை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியா- கயானா இடையேயான தொழில் வர்த்தகம் 11 சதவீதமாக உள்ளது. விரைவில் 22 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

கயானாவில் தமிழ்ப் பள்ளிகள், நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இந்திய உணவகங்கள் குறைவாகவே உள்ளன. எனவே, உணவு விடுதிகள் சார்ந்த தொழில்கள், இதர தொழில்களில் முதலீடு செய்ய இந்தியா முன்வர வேண்டும்.

விவசாயத்தில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக அதிக அளவிலான நிலங்களை ஒதுக்கீடு செய்துள்ளோம். இவற்றை இந்திய விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொண்டு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் எல்லை பிரச்னைக்கு வன்முறை தீர்வாகாது. ஆகவே, இரு நாட்டுத் தலைவர்களும் பேசி தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

மொரீஷியஸ் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி: ஆப்பிரிக்க நாடுகளில் சீனா அதிகளவில் முதலீடு செய்கிறது. ஆனால் இந்தியா பின்தங்கியுள்ளது. ஹாலிவுட்டுக்கு அடுத்ததாக சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் மொரீஷியஸில் சுற்றுலா தொடர்பான தொழில்களில் இந்தியா அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும்.

ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் தொழிலதிபர் அபுபக்கர்: பொருளாதாரம், தொழில், வணிகத் துறைகளில் தமிழர்களை முன்னுக்கு கொண்டு வருவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் தொழில் தொடங்கும்போது அவர்களுக்கு முதல் 10 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வரிச்சலுகை வழங்க வேண்டும்.

இலங்கை கல்வித் துறை இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன்: இந்தியா-இலங்கை இடையேயான நட்புறவு சிறப்பாக உள்ளது. இலங்கை மக்களால் தமிழர்கள் புறந்தள்ளப்படவில்லை. அங்குள்ள தமிழர்கள் தற்போது பாதுகாப்புடன் உள்ளனர். புதிதாகப் பதவியேற்ற அரசு தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து வருகிறது. மத்திய வங்கியின் ஆளுநர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் என பல்வேறு துறைகளில் ஏராளமான தமிழர்கள் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றுகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் நடத்துகின்றனர். இலங்கைத் தமிழர்கள் இருக்கும் பகுதியில் தொழிóல் வர்த்தகம் தொடர்பான அபிவிருத்திகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா, கல்வி என பல்வேறு துறைகளும் மேம்பட்டு வருகிறது. இங்கு முதலீடு செய்வதன் மூலம் இந்தியா தனது பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.

தொடக்க விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், மலேசிய முன்னாள் அமைச்சர் டி.மாரிமுத்து, தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், ஜெம் வீரமணி, பழனி ஜி.பெரியசாமி, மூத்த வழக்குரைஞர் காந்தி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழ் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter