வேளாண் பல்கலைக்கழக பண்ணை மேலாண்மை துறை சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாட்டம்

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணை மேலாண்மை துறை சார்பில், இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இவ்வாண்டு கோ53 நெல் உள்பட 13 புதிய கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணை மேலாண்மை துறை சார்பில், இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இவ்வாண்டு கோ53 நெல் உள்பட 13 புதிய கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணையில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று காலை நடந்த பொங்கல் விழாவுக்கு, 10 ஜோடி மாடுகளை ஊர்வலமாக அழைத்து கொண்டுவரப்பட்டு சூரிய பகவானுக்கு படையல் வைத்து பொங்கலை மாடுகளுக்கும் உண்ண கொடுத்தனர். 



இதனை தொடர்ந்து, மாடுகள் பட்டி மிதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நவதானியத்தில் மாடு கால் பதித்ததால் தானிய உற்பத்தி பெருகும் என நம்பப்படுகிறது. வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் பரிசுகளை வழங்கினார். 



அப்போது அவர் பேசுகையில், "பொங்கல் விழா என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல. உழவுத் தொழிலோடு சம்பந்தப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்படும் பொதுவான விழாவாகும். இவ்விழாவினை பார்ப்பதற்காக 65 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் இருந்து வந்த ஆராய்ச்சியாளர் தற்போது மீண்டும் தங்களது குடும்பத்துடன் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 13 புதிய ரகங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டதாக தெரிவித்த அவர், வேளாண்மையில் 7 ரகங்களும், தோட்டக்கலையில் 6 ரகங்களும் விஞ்ஞானிகளின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.

வேளாண்மையில் வறட்சி மற்றும் தண்ணீர் குறைவான பகுதிகளில் நெல் பயிரிட ஏதுவாக கோ 53 என்ற புதிய ரகத்தை உருவாக்கி உள்ளதாகவும், உளுந்தில் தேமல் நோய் வராமல் தடுக்கும் வகையில் புதிய ரகத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், சோளம் மற்றும் தினையில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், தக்காளியில் புதிய வீரிய ஒட்டு ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதில் நாட்டு தக்காளியினுடைய சுவை அதிகம் இருக்கும் எனவும், ஹெக்டேருக்கு மற்ற தக்காளியை காட்டிலும் , உற்பத்தியின் அளவு அதிகரிக்கும் என்றார். வேளாண் மக்கள் உழவுத்தொழில் செய்து அறுவடை செய்த தானியங்களை, இயற்கையின் கடவுளான சூரியனுக்கு படைத்து மகிழ்கின்ற நாளாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என கூறினார்.

இந்த விழாவில் வேளாண் பல்கலை துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். இதில் பட்டி மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 திரவியங்கள் நிரப்பப்பட்ட பாத்தியில் பசு மாட்டை மிதிக்க வைத்து, எந்த பாத்தியில் மிதிக்கிறதோ அந்த வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு நெல் பயிரை மிதித்து உள்ளது. இந்தாண்டு விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக 13 வகை புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்து உள்ளனர். இவைகள் அனைத்தும் கால நிலைக்கேற்ப விளைச்சல் தரும் என பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

Newsletter