அமெரிக்கன் படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோளப் பயிர்களைக் காக்கும் வழிமுறைகள்

மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உத்திகள் மற்றும் பயிரி பாதுகாப்பு முறைகளைக் கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு :-

மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உத்திகள் மற்றும் பயிரி பாதுகாப்பு முறைகளைக் கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு :-

ஆழமான உழவு : நிலத்தினை ஆழமாக உழவு செய்வதன்‌ மூலம்‌ மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள்‌ வெளிப்பட்டு, சூரிய ஒளி மற்றும்‌ பறவைகளால்‌ அவை அழிக்கப்படும்‌. அவ்வாறு செய்வதால்‌ கூட்டுப்புழுவிலிருந்து அந்தப்பூச்சி உருவாவது தடுக்கப்படும்‌. 

கடைசி உழவின்‌ போது வேப்பம்‌ புண்ணாக்கு : கடைசி உழவு மேற்கொள்ளும்போது, ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம்‌ புண்ணாக்கு மண்ணில்‌ இட வேண்டும்‌.

விதை நேர்த்தி : ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம்‌ பவேரியா பேசியானா என்ற‌ நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி அல்லது 10 கிராம்‌ தயோமீதாக்சம்‌ 30 சதம்‌ எப்.எஸ்‌ கொண்டு விதை நேரத்தி செய்ய வேண்டும்‌.

போதிய பயிர்‌ இடைவெளி : இறவை மக்காச்சோளத்திற்கு வரிசைக்கு வரிசை 60 செ.மீட்டரும்‌, பயிருக்கு 25 செ.மீட்டர்‌ இடைவெளியும்‌, மானாவாரி மக்காச்சோளத்திற்கு வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டரும்‌, பயிருக்கு பயிர்‌ 20 செ.மீட்டர் இடைவெளியும்‌ கொண்டு விதைக்க வேண்டும்‌. மேலும்‌, 10 பயிர் வரிசைக்கு ஒரு வரிசை 75 செ.மீ இடைவெளி விட வேண்டும்‌. இதனால்,‌ பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளலாம்‌.

வேப்ப எண்ணெய்‌ கரைசல்‌ தெளித்தல்‌ : விதைத்த 15-ம்‌ நாள்‌ 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் கரைசல்‌ 1 சதம்‌ 20 மில்லி லிட்டர் விகிதத்தில்‌ கலந்து தெளிக்க வேண்டும்‌. இதன் மூலம்‌ அந்தப்பூச்சி இலைகளின்‌ மேல்‌ முட்டையிடுவதைத் தடுக்கலாம்‌.

இனக்கவர்ச்சி பொறிகள்‌ வைத்தல் ‌: அமெரிக்கன்‌ படைப்புழு தாய்‌ அந்துப் பூச்சிகள்‌ உள்ளதா என கண்காணிப்பதற்கு விதைத்தவுடன்‌ 3-5 நாட்களில்‌ எக்டருக்கு 12 இனக்கவர்ச்சி பொறிகள்‌ வைக்க வேண்டும்‌. அதிக எண்ணிக்கையில்‌ தாய்‌ அந்துப்‌ பூச்சிகள்‌ தெரிந்தால்‌, அவைகளை கவர்ந்து அழிக்க எக்டருக்கு 50 இனக்கவர்ச்சி பொறிகள்‌ வைக்க வேண்டும்‌.

வரப்புப்‌ பயிர்‌ மற்றும்‌ ஊடு பயிர்‌ பயிரிடுதல் ‌: மக்காச்சோளம்‌ விதைக்கும்‌ போது, தட்டைப்பயிறு, சூரியகாந்தி, எள்‌, சோளம்‌ மற்றும்‌ சாமந்தி பயிர்களை வரப்பிலும்‌ மற்றும்‌ பயறு வகைப்பயிர்களை ஊடு பயிராக விதைத்தால்‌, இயற்கை ஒட்டுண்ணிகளும்‌, இரை விழுங்கிகளும்‌, அதிக எண்ணிக்கையில்‌ பெருகி அமெரிக்கன்‌ படைப்புழுவினை தாக்கி அழிக்கும்.

முட்டைக்‌ குவியல்கள்‌ மற்றும்‌ இளம்‌ புழுக்களை கைகளால்‌ சேகரித்து அழித்தல் ‌: இளம்பயிர்களில்‌ காணப்படும்‌ அந்தப்பூச்சிகளின்‌ முட்டைக்குவியல்கள்‌ மற்றும் இளம்புழுக்கூட்டங்களை கைகளால் சேகரித்து அழிக்க வேண்டும்.

பயிர்‌ சுழற்சி : படைப்புழு அதிகம்‌ தாக்கும்‌ மக்காச்சோளப்பயிரை மீண்டும்‌ மீண்டும்‌ சாகுபடி செய்வதைத்‌ தவிர்த்து, பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றினால்‌ படைப்‌ புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த இயலும். 

 

உயிரியல்‌ பூச்சிக்கொல்லி தெளித்தல் ‌: மெட்டாரைசியம்‌ அனிசோபிலே என்ற உயிரியல்‌ பூச்சிகொல்லியினை எக்டருக்கு 4 கிலோ என்ற அளவில்‌ தெளிக்கவேண்டும்‌.

முட்டை ஒட்டுண்ணி வெளியிடுதல்‌ : ஒரு எக்டருக்கு டிரைக்கோகிரம்மா பிரிட்டோசியம்‌ என்ற முட்டை ஒட்டுண்ணியினை 5சிசி என்ற விகிதத்தில்‌ ஒரு வார இடைவெளியில்‌ 2-3 தடவை மக்காச்சோள வயல்களில் வெளியிட்டால் அமெரிக்கன் படைப்புழுவினை கட்டுப்படுத்தலாம். முட்டை ஒட்டுண்ணி வெளியிடும்‌ வயல்களில்‌ இரசாயன பூச்சிக்கொல்லிகளை

பயன்படுத்தக் கூடாது.

ஒவ்வொரு வளர்ச்சிப்‌ பருவத்திலும்‌ தெளிக்க வேண்டிய மருந்துகள்‌ விபரம்‌:

இளம்‌ குருத்து பருவம்‌ (விதைப்பு செய்த 15 முதல்‌ 20 நாட்கள்)‌ :

 • அசாடிராக்டின்‌ 1 சதம்‌, 10 லிட்டர் நீரில்‌ 20 மி.லி.

 (அல்லது)

 • நவல்பூரான்‌ 10 இசி 10 லிட்டர் நீரில்‌ 15 மி.லி.

 (அல்லது)

 • எமாமெக்டின்‌ பென்சோயேட்‌ 5 எஸ்.சி. 10 லிட்டர் நீரில்‌ 4 கிராம்‌

குருத்து பருவம்‌ (விதைப்பு செய்த 40 முதல்‌ 45 நாட்கள்) :

 • உயிரி பூச்சிக்‌ கொல்லி மெட்டாரைசியம்‌ அனிசோபிலே 10 லீட்டா நீரில்‌ 80

கிராம்‌

 (அல்லது)

 • ஸ்பைனிடோரம்‌ 11.7% எஸ்.சி. - 10 லிட்டர்‌ நீரில்‌ 5 மி.லி.

 (அல்லது)

 • குளோரான்டிரில்புரோல்‌ 18.5% எஸ்.சி. - 10 லிட்டர் நீரில்‌ 5 மி.லி.

முதிர்ச்சி பருவம் (விதைப்பு செய்த 60 முதல்‌ 65 நாட்கள்) ‌:

 

 • புளுபென்டமைடு 480 எஸ்.சி. - 10 லிட்டர் நீரில்‌ 4 மி.லி.

 (அல்லது)

 • குளோராரினிபிரோல்‌ 18.5 எஸ்.சி. 10 லிட்டர் நீரில்‌ 5 மி.லி.

மருந்து தெளிக்கும்‌ போது பின்பற்ற வேண்டியது :

1. கைத் தெளிப்பானை உபயோகப்படுத்திப் பயிர் பாதுகாப்பு மருந்துகளைத்‌ தெளிக்க வேண்டும்‌.

2. ஒரு முறை உபயோகித்த பூச்சி மருந்தை மீண்டும்‌ உபயோகிக்கக்‌ கூடாது.

3. பூச்சி மருந்தை, செடியின்‌ குருத்துப்‌ பகுதியை நோக்கி தெளிக்க வேண்டும்‌.

4. பரிந்துரை இல்லாத இரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாகப் பயன்‌படுத்தக்கூடாது.

நடப்பாண்டில்‌ அமெரிக்கன்‌ படைப்புழு தாக்குதல்‌ வாராமல்‌ தடுப்பதற்கு மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். 

Newsletter