நூற்புழு பரிசோதனைக்கு மண் மற்றும் வேர் மாதிரிகளை அனுப்பும் முறை

கோவை : செடியின் இளம் சல்லி வேர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நூற்புழுக்கள் குறித்த பரிசோதனைக்கு மண் மற்றும் வேர் மாதிரிகளை அனுப்பும் முறை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : செடியின் இளம் சல்லி வேர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நூற்புழுக்கள் குறித்த பரிசோதனைக்கு மண் மற்றும் வேர் மாதிரிகளை அனுப்பும் முறை வெளியிடப்பட்டுள்ளது.

நூற்புழுக்களினால் ஏற்படுத்தப்படும் சேத அறிகுறிகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து மற்றும் நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகளை ஒத்திருப்பதால் மண் மற்றும் பாதிக்கப்பட்ட செடிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. பெரும்பாலான நூற்புழுக்கள் செடியின் இளம் சல்லி வேர்களில் இருந்துதான் சாற்றை உறிஞ்சுகின்றன. எனவே, நூற்புழுக்கள் அதிகம் காணப்படும். செடியின் சல்லி வேர், வேரைச் சுற்றியுள்ள மண் மாதிரிகளைத்தான் சோதனைக்கு எடுத்து அனுப்ப வேண்டும். வாழையின் கிழங்கு பாகம், வெங்காயம் இவற்றில் அழுகல் தென்பட்டால் அவ்வாறு அழுகிக் கொண்டிருக்கும் பகுதிகளில் இருந்து சிறுதுண்டுகளை வெட்டி எடுத்து மண் வேர் மாதிரிகளுடன் அனுப்பலாம். முழுவதும் காய்ந்த செடியில் இருந்தும், பொதுவாக ஆணி வேர் பகுதியையும் மாதிரியாக எடுக்கத் தேவை இல்லை.

1. காய்ந்த மேல் மண்ணில் நூற்புழுக்களின் இயக்கம் குறைவு. எனவே மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் மேலாக உள்ள காய்ந்த மண்ணை சுமார் 1-3 செ.மீ கனத்திற்கு மண்வெட்டியால் (களைகொட்டு அல்லது கத்தியும் பயன்படுத்தலாம்) சுரண்டி நீக்கவும்.

2. இவ்வாறு காய்ந்த மேல் மண்ணை நீக்கிய பின்பு செடிக்கருகில் சுமார் 15 செ.மீ (அரை அடி) ஆழத்திற்கு ‘ஏ’ வடிவ பள்ளம் செய்யவும்.

3. இதில், குறுக்கிடும் சல்லி வேர்களையும், பள்ளத்தின் பக்கங்களில் இருந்து, மேலிருந்து கீழாக சுமார் இரண்டு செ.மீ கனத்திற்கு மண்ணையும் ஒரு தட்டு அல்லது பேசின் அல்லது பாலிதீன் பையில் எடுத்துக் கொள்ளவும். வாழைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றில் அழுகல் காணப்பட்டால் முற்றும் அழுகாத பகுதியில் இருந்து சிறு துண்டுகளை வெட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

4. இவ்வாறு தோட்டத்தில் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும் இடங்களில் இருந்து பரவலாக சுமார் 10 செடிகளில் வேர், (கிழங்கு) மண் இவற்றை சேகரித்து நன்றாக கலந்து சமக்கூறு முறையால் இதிலிருந்து சுமார் 500 கிராம் (250 மில்லிக்கு குறையாமல் மண்ணும் 50 கிராம் வேரும் (கிழங்கு) மாதிரியாக எடுக்கவும்.

குறிப்பு

1. எலுமிச்சை போன்ற மரங்களில் இருந்து மாதிரி எடுக்க இவ்வாறு சுமார் 30 செ.மீ (ஒரு அடி) ஆழம் பள்ளம் செய்து மாதிரி எடுக்க வேண்டும்.

2. நெற்பயிரானால் மாதிரிக்கான முதல்களை (குத்து) வேர், வேரைச் சுற்றியுள்ள மண்ணுடன் இளம் வேர்கள் அதிகம் அறுபடாமல் பெயர்ந்து எடுத்து, இதிலிருந்து சிறு பகுதிவேர், மண் இவற்றை மாதிரிக்காக எடுத்தபின் மீதி துர்களை எடுத்த இடத்தில் திரும்ப புதைத்துவிடலாம்.

3. நெற்பயிரில் பதர் ஏற்படுத்தும் ‘வெண் இலை நுனி நூற்புழுக்காக சோதிக்க வேண்டுமென்றால் வயலில் பரவலாக எடுக்கப்பட்ட சுமார் 10-15 நெல் கதிர்களை மாதிரியாக அனுப்ப வேண்டும்.

சேகரிக்கப்பட்ட மண், வேர் (கிழங்கு) மாதிரிகளை ஈரம் போகாமல் ஒரு பாலிதீன் பைக்குள் இட வேண்டும். இத்துடன் இரண்டு சிறு தாள்களில் விவசாயியின் முழுவிலாசம், வயல் பெயர் அல்லது எண், பயிர், ரகம், மண் மாதிரி எடுத்த தேதி முதலிய விபரங்களை பென்சிலால் எழுதி, ஒரு தாளை பைக்குள்ளும் மற்றொரு தாளை பைக்கு வெளியிலும் வைத்து கட்டுவது அவசியம். இவ்வாறு ஒரு வயலில் எடுத்த மாதிரி அல்லது பல வயல்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஒரு துணிப் பை அல்லது அட்டைப் பெட்டிக்குள் வைத்து கீழ்க்கண்ட விலாசத்திற்கு, மாதிரி எடுத்த அன்றே அல்லது மறுநாள் பதிவு செய்யப்படாத பார்சல் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும் அல்லது நேரிலும் கொண்டு வந்து கொடுக்கலாம்.

பேராசிரியர் மற்றும் தலைவர்

நூற்புழுவியல் துறை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்

கோவை-641003

தொலைபேசி எண்-0422 6611264

மக்கள் தொடர்பு அலுவலகம்

Newsletter