Exclusive : திராட்சையைத் தாக்கும் இலைப்பேன்களை கட்டுப்படுத்துவது எப்படி - கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை விளக்கம்

கோவை : கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், இலைப்பேன்களிடம் இருந்து திராட்சைகளை பாதுகாப்பது பற்றி விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை யோசனை தெரிவித்துள்ளது.


கோவை : கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், இலைப்பேன்களிடம் இருந்து திராட்சைகளை பாதுகாப்பது பற்றி விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை யோசனை தெரிவித்துள்ளது.

வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழப்பயிர்களில் அதிக அளவில் வணிகம் செய்யப்படும் திராட்சையை தாக்கும் இலைப்பேன்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகள் தெரிந்துகொள்வது அவசியமாகும். தமிழகத்தில், தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் திராட்சை ரகங்கள் பரவலாக விளைவிக்கப்படுகின்றன. 



கோவையைப் பொறுத்தவரையில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள தீத்திப்பாளையம், மாதம்பட்டி, கரடிமடை உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பன்னீர் மற்றும் கருந்திராட்சை வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிக குளிர் மற்றும் வறட்சி காலங்களில் திராட்சையைத் தாக்கும் இலைப்பேன் பாதிப்புகள் தற்போது தொடங்கியுள்ளது. இவை திராட்சையின் மொத்த மகசூலை பாதிப்பதோடு, பழத்தின் சந்தை மதிப்பையும் குறைக்கின்றன.



இந்த நிலையில், திராட்சையைத் தாக்கும் இலைப்பேன்களை கட்டுப்படுத்தும் பொதுவான வழிமுறைகள் குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் ஸ்ரீதரன் விளக்கியதாவது :- இலைப்பெண்களின் பாதிப்பால் திராட்சையின் இலைகள், காம்பு மற்றும் பழக் கொத்துக்களில் சொறிகள் கணப்படும். இதனால், திராட்சையின் சந்தை மதிப்பு பெருமளவு பாதிக்கப்படுகிறது. இந்த இலைப்பேன்கள் காற்றில் அதிக ஈரப்பதம் காணப்படும் கடுங்குளிர் மற்றும் ஈரப்பதமில்லாத வறட்சி காலங்கள் என இரண்டு பருவங்களிலும் பயிரை பாதிக்கிறது. இவை பழத்தின் திசுக்களை சுரண்டி, சாறினை உறிஞ்சுவதால், பழத்தில் சொறி ஏற்படுகிறது. இதனால், நோய் பரப்பும் நுண் கிருமிகள் பழத்தை தாக்க அதிக வாய்ப்புள்ளது.



இவற்றை கட்டுப்படுத்த நன்மை செய்யக்கூடிய பூச்சிகளை பாதுகாப்பது கட்டாயமாகும். 

கெமிக்கல் உரங்களை தவிர்க்கும் பட்சத்தில் இந்த பூச்சிகள் பெருகிவிடும். இவை இலைப் பேன்களை அழித்துவிடும். தாவர பூச்சிகளைக் கொல்லும் பூஞ்சான் வகைகளையும் பயன்படுத்தலாம். நைட்ரஜனை குறைத்துவிட்டு, சாம்பல் சத்து அதிகம் உள்ள உரங்களை பயன்படுத்தலாம். மேலும், வழக்கத்தை விட கூடுதலாக நீர் கிடைக்கும் பட்சத்தில், இலைப் பேன்கள் குறைய வாய்ப்புள்ளது. வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டை சாறு மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளை தெளிப்பதனால் இலைப்பேன்கள் தடுக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது, என்றார்.

Newsletter