அங்கக வேளாண்மைச் சான்றிதழ் எதற்கு..? எப்படி பெறுவது..? : வேளாண் அதிகாரிகள் கூறுவது என்ன..?

கோவை : தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அங்கக வேளாண்மைச் சான்றிதழ் பற்றிய பயன்பாடுகள் பற்றியும், அதனை பெறும் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா...?


கோவை : தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அங்கக வேளாண்மைச் சான்றிதழ் பற்றிய பயன்பாடுகள் பற்றியும், அதனை பெறும் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா...?

செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை தவிர்த்து, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இயற்கை வேளாண் சாகுபடி முறையே 'அங்கக வேளாண்மை' எனப்படுகிறது. தற்போது, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள், உணவு பொருள்கள் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்டப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைத்து வருகிறது.

ஆனால், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் என்று கூறி போலி வியாபாரமும் ஆங்காங்கே நடைபெறுகிறது. இந்த நிலையில், உண்மையாகவே இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை அங்கீகரிக்கவும், நுகர்வோர் பயன்பெறவும், மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின்படி செயல்பட்டு வரும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை, விவசாயிகளுக்கு 'அங்கக வேளாண்மைச் சான்றினை' வழங்கி வருகிறது.



இந்த சான்றின் அடிப்படையிலேயே இயற்கை விவசாயித்திற்கான அரசின் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அங்கக வேளாண்மைச் சான்றின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அங்கக வேளாண்துறை தலைமைப் பேராசிரியர் ஏ.சோமசுந்தரம் கூறியதாவது :- அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் அங்கக வேளாண்மைச் சான்று வாங்குவது மிகவும் அவசியமாகும். இச்சான்றின் மூலம் விவசாயிகள் மீதான நுகர்வோரின் நம்பிக்கை அதிகரிக்கும். குறிப்பாக, இயற்கை விளைபொருட்களை ஏற்றுமதி செய்வோர் இச்சான்றை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின்படி அங்ககச் சான்று பெற தனி நபராகவோ, குழுவாகவோ பதிவுசெய்து கொள்ளலாம். மேலும், கால்நடை பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப் பொருட்கள் சேகரிப்பு செய்வோரும் இதில் பதிவு செய்து பயன்பெறலாம். குறிப்பாக, அங்கக வேளாண்மை முறையை கடைபிடிக்கும் விவசாயிகள் குழுவாக இணைந்து ஒரே மாதிரியான விளைபொருட்களை திட்டமிட்டு, அதிக அளவில் சாகுபடி செய்வதன் மூலம் சந்தையில் நல்ல லாபம் பெறலாம், என்றார்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, சுமார் 2,717 ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இச்சான்றினை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

அங்கக வேளாண்மைச் சான்று பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், "சான்று பெற விரும்புவோர் இயற்கை வழி வேளாண்மை முறையில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மற்றும் ரசாயன நேர்த்தி செய்த விதைகளை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. அங்ககச் சான்று பெற வேண்டுமானால் ஆண்டுப் பயிர் விதைப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும், பல்லாண்டு பயிர்களுக்கு, முதல் அறுவடை தொடங்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் தேசிய அங்கக உற்பத்திக்காக கூறப்பட்டுள்ள உரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். 



குறிப்பாக, ஏற்கனவே அங்கக முறையில் தொடர்ந்து சாகுபடி செய்பவர்களாக இருந்தாலும் குறைந்தது 12 மாதங்கள் காத்திருந்து, அதன் பிறகுதான் சான்று பெற இயலும். விண்ணப்பப் படிவம், பண்ணையின் பொதுவிவரக் குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் விவரம், ஆண்டுப் பயிர் திட்டம், நில ஆவணம் (சிட்டா நகல்), நிரந்தரக் கணக்கு எண் (PAN Card) போன்ற விவரங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்," என்றனர்.

அங்ககச் சான்று பெற விரும்பும் விவசாயிகளிடம் பேசிய போது, "சான்று பெற 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதை இரண்டு ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மேலும், சான்று பெறுவதற்கான கட்டணத் தொகையை குறைக்கும் பட்சத்தில், அதிக விவசாயிகள் அங்கக வேளாண்மைக்கு மாற வாய்ப்புள்ளது' என தெரிவித்தனர்.

மேலும் தகவல்களுக்கு, விதைச் சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு இயக்குநர், 1424 ஏ, தாடகம் சாலை, கோயம்புத்தூர் – 641 013 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: 0422 2435080.

Newsletter