மக்காச்சோளத்தின் விலையில் சிறிய மாற்றமே இருக்கும் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

கோவை : மக்காச்சோளத்தின் விலையில் சிறிய அளவிலான மாற்றமே இருக்கும் என கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது-

கோவை : மக்காச்சோளத்தின் விலையில் சிறிய அளவிலான மாற்றமே இருக்கும் என கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது- 

மக்காச்சோளம் இந்தியாவில் பயிரிடக்கூடிய தானிய பயிர் வகைகளில் முக்கியமான பயிராகும். இவை கரிப் பருவத்தில் (2018) தோராயமாக 74.34 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தது. 

விவசாய மற்றும் விவசாய நலஅமைச்சகத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2018 -19 ஆண்டில் மக்காச்சோளம் 96.33 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 21.5 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நம் நாட்டில் கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, பீகார், உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. 

தமிழகத்தில் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மக்காச்சோளம் அதிகளவு பயிரிடப்படுகின்றன. கரிப் பருவத்தில் (2018) கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசத்தில் பாதிப்பை ஏற்படுத்திய மக்காச்சோள படைப்புழுவானது, தமிழகத்திலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. 

நாட்டின் மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கரிப் உற்பத்தி 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் மக்காச்சோள விலை அதிகரிக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சந்தை மூலகங்களின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்படும் வறட்சியால் ரபீ பருவத்தில் மக்காச்சோள உற்பத்தியானது, மேலும் குறையும் என அறியப்பட்டுள்ளது. 

தற்போது, வரத்தானது உடுமலைப்பேட்டை சந்தைக்கு அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து வரத் தொடங்கியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வரும் வரத்தானது பிப்ரவரி மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்படி கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரகமேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. 

ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை அறுவடையின் போது குவிண்டாலுக்கு ரூ. 1,700 - ரூ. 1,800 ஆக இருக்கும் எனவும் பூச்சி தாக்கம் மற்றும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதியைப் பொறுத்து மக்காச்சோள விலையில் சிறிது மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

Newsletter