கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் இயந்திரங்களின் செயல் விளக்கக் கண்காட்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பண்ணை இயந்திரங்கள் கண்காட்சி மற்றும் செயல் விளக்க விழா இன்று நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பண்ணை இயந்திரங்கள் கண்காட்சி மற்றும் செயல் விளக்க விழா இன்று நடைபெற்றது. 



தொடக்கவிழாவில் தலைமையுரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார், வேளாண் உற்பத்தித் திறன் மேம்பாட்டில் வேளாண் இயந்திரங்களின் பெரும் பங்களிப்பை வலியுறுத்தி பேசினார். வேளாண் பெருமக்களின் பயனீட்டுக் கருத்துக்களை உள்வாங்கி, வேளாண் எந்திரங்களை மாற்றம் செய்வதன் மூலம் வேளாண் இயந்திரவியலில் வியத்தகு சாதனைகளை எட்டலாம் எனத் தெரிவித்தார்.



நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட டெல்லி வேளாண் பொறியியல் துணை தலைமை இயக்குநர் அழகுசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். வேளாண்மையில் தற்போது 48 சதவிகிதம் என்று இருக்கும் இயந்திர பயன்பாடு அடுத்த 20 வருடங்களில் 70 சதவிகிதம் உயர வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். அரசாங்கத்தின் வேளாண் கூட்டுறவு மற்றும் வேளாண் இயந்திரம் வாடகை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது, என தெரிவித்தார். 



மேலும், பண்ணை இயந்திரங்கள் மூலம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் வைக்கோல் எரித்தல் மூலம் உருவாகும் புகை 45 சதவிகித அளவில் கட்டுப்படுத்தப்பட்ட சமீபத்திய வெற்றிக் கதையை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.



மேலும், நாமக்கலைச் சேர்ந்த சரவணன், சந்தியூரைச் சேர்ந்த சுகவனம் சிவப்பிரகாசம் மற்றும் கரூரைச்சேர்ந்த துரைசாமி ஆகியோருக்கு சிறந்த பண்ணைக் கருவி பயனீட்டாளர் விருது வழங்கி கௌரவித்தார். மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் இயந்திரவியலை தங்கள் பண்ணையில் செயல்படுத்திய 20 விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.



நிகழ்ச்சியில் டிராக்டரில் இயங்கும் சுழலும் மண்வெட்டி, உளிக்கலப்பை, தென்னை நார்க் கழிவு இடும் கருவி, பாத்தி அமைக்கும் கருவி, விதை விதைக்கும் கருவி, குழி தோண்டும் கருவி, குழல் தெளிப்பான், நிலக்கடலை அறுவடை இயந்திரம், ரோபா மூலம் இயங்கும் நெல் நடவு இயந்திரம் போன்ற வேளாண் கருவிகள் விவசாயப் பெருமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

Newsletter