கோவையில் பயிர்களுக்கேற்ப பொறியியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த செயல்விளக்க விழா

கோவை : பயிர்களுக்கேற்ப தொழில் நுட்பங்களும், கருவிகளும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்விளக்க விழா வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.


கோவை : பயிர்களுக்கேற்ப தொழில் நுட்பங்களும், கருவிகளும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்விளக்க விழா வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. 

இன்றைய சூழ்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப பயிர் உற்பத்தியைப் அதிகரிக்கச் செய்வது மிகவும் இன்றியமையாதது. இந்நிலையில், பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகின்றது. மேலும், பண்ணை வேலை ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 

ஆகையால், வேளாண்மையில் உற்பத்தியைப் பெருக்கி, செலவைக் குறைப்பதில் வேளாண் பொறியியல் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் இன்றியமையாத பங்கு பெறுகின்றன. சாகுபடி முறையில் கருவிகள் பயன்பாட்டுக்கு வரும் பொழுது, அதற்கு தகுந்தாற்போல் பயிர் இடைவெளி, நடவுமுறை மற்றும் களை எடுக்கும் முறை இவற்றை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. வேகமாக மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப கருவிகளை தெரிவு செய்து உபயோகிக்க, கருவிகளின் செயல்விளக்கம் இன்றியமையாதது. 

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகின்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் வேளாண்மையில் ஆற்றல் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள், துல்லிய பண்ணைய வளர்ச்சி மையம் மற்றும் கூட்டமைப்பு ஆராய்ச்சி தளம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த, செயல் விளக்க விழா வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. 

இந்த விழாவின் நோக்கமே, பயிர்களுக்கேற்ப தொழில் நுட்பங்களும், கருவிகளும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும். ஆகவே, இதில், பல்வேறு திட்டங்களில் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகளும்; செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட உள்ளது. 

மேலும், இவ்விழாவில் தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு பல்வேறு கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்களை நடத்த இருக்கின்றனர். விஞ்ஞானிகள் பங்கு பெறும் உழவர் கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. இந்த செயல் விளக்க விழாவில் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையங்கள் வாயிலாகக் கலந்து கொள்ள உள்ளார்கள். 

Newsletter