Exclusive: படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்படும் மக்காச்சோளப் பயிர்கள் : கோவை விவசாயிகள் கவலை

கோவை : மக்காச்சோளத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் படைப்புழுவின் தாக்குதல் அதிகரித்து வருவதால், பயிர் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தின் விலை ரூ. 2.160 ஆக உயர்ந்துள்ளது.


கோவை : மக்காச்சோளத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் படைப்புழுவின் தாக்குதல் அதிகரித்து வருவதால், பயிர் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தின் விலை ரூ. 2.160 ஆக உயர்ந்துள்ளது.



கோவை மாவட்டத்தில் சுமார் 4,500 எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. நெல், கரும்பு, சோளம், மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம் மற்றும் புல்வகை களைகளில் காணப்படும் படைப்புழு தாக்குதல் கடந்த ஆறு மாதங்களாக கோவை மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

இந்தப் புழு மக்காச்சோளப் பயிரில் வளரக்கூடிய குருத்துப் பகுதியில் சேதத்தை விளைவிக்கிறது. இந்தப் புழுவின் தாக்கத்தால் இலைகளில் வரிசையாக வட்ட வடிவில் அல்லது வடிவமற்ற துவாரங்கள் உருவாகின்றன. சில செடிகளின் இலைகளின் மேல்பகுதி முற்றிலும் மடிந்தும் காணப்படும். இந்தப் புழுக்கள், பயிரின் நுனி மற்றும் காம்பு பகுதிகளிலும் பாதிப்புகளை உருவாக்குகின்றன.

இவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பறக்கும் திறனுடையதால் அருகிலுள்ள மற்ற பயிர்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

"படைப்புழுவின் தாக்கத்தால் மக்காச்சோளம் பயிரிட்ட கோவை மாவட்ட விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மக்காச்சோளத்தின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்னர் ரூ.1,300-க்கு விற்கப்பட்ட ஒரு குவிண்டால் மக்காச்சோளம், தற்போது ரூ.2,160-க்கு விற்கப்படுகிறது. ஒரு எக்டருக்கு 33% அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நிவாரண நிதியாக ரூ.13,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம். தட்பவெப்பநிலை, வனவிலங்கு பிரச்சனை, இவற்றோடு படைப்புழு தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கிட வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கிறார் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பெரியசாமி.



இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளிடம் பேசியபோது :- காலம் தாழ்த்தி பயிர் செய்வதை தவிர்த்து விட்டு, ஒரு பகுதியில் உள்ள விவசாயிகள் ஒரேசமயத்தில் பயிர் செய்வது நல்லது. பருவம் தாழ்த்தி பயிர் செய்வதால் பாதிப்பு அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், பல்வேறு நிலைகளில் மக்காச்சோளம் இருந்தால் படைப்புழு உண்பதற்கு உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும். இதனை தவிர்க்க விவசாயிகள் முயற்சி செய்யவேண்டும். முதல் மழையை உபயோகித்து மக்காச்சோளம் நடுவது படைப்புழுவின் பாதிப்பை குறைக்க இயலும். 

மரவள்ளி அல்லது பீன்ஸ் போன்ற படைப்புழுக்கள் அதிகம் விரும்பாத பயிர்களை ஊடுபயிராக பயிர் செய்யலாம். நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதன் மூலம் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி, மேலும் தெளிவு பெறலாம். என்றனர்.

Newsletter