கோவையில் விவசாயிகளுக்கு தானியங்களைப் பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை : கோவையில் உணவு தானியங்களைப் பதப்படுத்துதல், பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வை விவசாயம் சார் நிறுவனமான யு.பி.எல் இன்று ஏற்படுத்தியது.

கோவை : கோவையில் உணவு தானியங்களைப் பதப்படுத்துதல், பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வை விவசாயம் சார் நிறுவனமான யு.பி.எல் இன்று ஏற்படுத்தியது. 

நாடு உணவு தானிய உற்பத்தியில் தனது பலத்தை அதிகரித்தாலும், தானியங்கள் பாதுகாப்பில் ஏற்படும் கவனக்குறைவால் விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது. இதைத் தடுக்க விவசாயம் சார் நிறுவனமான யு.பி.எல், 'தானியங்களைப் பாதுகாப்போம் : ஒவ்வொரு தானியமும் உன்னதமானது' என்ற பிரச்சாரத்தை கோவையில் இன்று தொடங்கியது. 

ஏற்கனவே, இந்த பிரச்சாரத்தை மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தை விவசாயிகள் மற்றும் உணவு தானியங்களைப் பதப்படுத்தும் தொழிலில் உள்ளவர்கள் வரவேற்றுள்ளனர். கோவையில் நாதகவுண்டன்புதூர் என்ற கிராமத்தில் யு.பி.எல், விவசாயிகள் மத்தியில் நேரடி செயல்முறை விளக்கத்தை அளித்தது. இந்த நிகழ்ச்சியின்போது விவசாயிகள் உணவு தானியங்களைப் பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

ப்யூமிக்ண்ட் பிசினஸ் அமைப்பின் தலைவர் உஜ்வால் குமார் பேசுகையில், "இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது விவசாயிகள் உணவு தானியங்களை முறையாகப் பதப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். இதனால் பூஞ்சைக் காளான் மற்றும் பூச்சிகளிடமிருந்து தானியங்களைக் காப்பாற்றி விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதுடன் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

மேலும், இன்றைய சூழலில் நாம் உணவு உற்பத்தியை அதிகரிப்பதை விடவும், உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியங்களை பாதுகாப்பாகத் தேக்கி வைப்பதை உறுதி செய்வதே அவசியம். இது சந்தை தேவையை நிறைவு செய்வதுடன், நாட்டில் எப்போதும் தானிய கையிருப்பு தேவைக்கு அதிகமாக இருப்பதையும் உறுதி செய்யும். அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் வருமானத்தையும் பெருக்கும். 

இந்த இலக்குடன்தான் ஒவ்வொரு மாவட்டமாக விவசாயிகளின் வீடு தேடிச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அடுத்த வாரம் முதல் இந்தப் பிரச்சாரம் இன்னும் பல மாவட்டங்களை எட்டும்" என்றார்.

Newsletter