தண்ணீர் வராததால் தாமதமாகும் சம்பா சாகுபடி: நீண்ட கால விதைக்கு தவறிய வாய்ப்பு

மேட்டூர் அணை நிரம்பி வழிந்தாலும், டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் சம்பா பருவ நெல் சாகுபடியும் தாமதமாகிறது.

மேட்டூர் அணை நிரம்பி வழிந்தாலும், டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் சம்பா பருவ நெல் சாகுபடியும் தாமதமாகிறது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சம்பா சாகுபடிக்குச் சாதகமான நிலை இருந்தது. ஆனால், வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும், கரைகள் பலமில்லாததாலும் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் விடப்படவில்லை. இதனால், கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லவில்லை. கிளை வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் உள்ளதால், தண்ணீர் செல்வதில் தாமதம் நிலவுகிறது.

இந்நிலையில், முக்கொம்பு மேலணையில் கொள்ளிடத்தில் உள்ள மதகுகள் ஆக. 22-ம் தேதி உடைந்ததால், டெல்டா மாவட்டப் பாசனத்துக்கு நீர் வரத்து மேலும் குறைந்துவிட்டது. ஏற்கெனவே, கல்லணைக் கால்வாய் பாசன விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது காவிரி, வெண்ணாற்றுப் பாசன விவசாயிகளும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்பா சாகுபடியைத் தொடங்குவதில் விவசாயிகள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.05 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 4,800 ஹெக்டேரில்தான் நடவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 1.24 லட்சம் ஹெக்டேரில் 40,000 ஹெக்டேரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நாற்றங்கால் விடப்பட்டுள்ள நிலையில், நடவுப் பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

நாகை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 96,000 ஹெக்டேரில் நேரடி விதைப்பு மூலம் 26,800 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்தாலும், நடவு முறையில் 2,600 ஹெக்டேரில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. நாற்றங்கால் 774 ஹெக்டேரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் மத்திய கால விதைகளே...: மேட்டூர் அணை ஜூலை 19-ம் தேதி திறக்கப்பட்டதால், நிகழாண்டு நீண்ட கால விதை நெல் ரகங்களின் (155 முதல் 160 நாள் வயதுடையது) பயன்பாடு அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 5 சதவீதம்கூட எட்டப்படவில்லை. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சி.ஆர். 1009 உள்ளிட்ட நீண்ட கால விதை நெல் ரகங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தனியார் மூலம் 1,000 டன்கள் அளவுக்கு விற்பனையானது. நீண்ட விதை நெல் ரகங்களைப் பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்துக்குள் சாகுபடியைத் தொடங்கினால்தான், வடகிழக்குப் பருவ மழையின்போது ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க முடியும். ஆனால், தண்ணீர் வரத்து இல்லாததால் வாங்கிய விதை நெல் வீணாகிவிட்டது. 

இனிமேல் நீண்ட கால விதை நெல் ரகங்களை விதைத்தால் மழையின்போது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நீண்ட கால விதை நெல்லைக் கைவிட்டு, மத்திய கால விதை நெல் ரகங்களுக்கு மாற வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால், நீண்ட கால விதை நெல்லுக்காகச் செலவிட்ட விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

Newsletter