கானல் நீராகிறதா காவிரி?

காவிரி, தமிழகத்தின் ஜீவாதார ஆறு. 19 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 12 லட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வருவாய் ஆதாரமாகவும் திகழ்கிறது.

காவிரி, தமிழகத்தின் ஜீவாதார ஆறு. 19 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 12 லட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வருவாய் ஆதாரமாகவும் திகழ்கிறது.

ஆனால், காவிரி நீர் கானல் நீராகிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.

1901-ஆம் ஆண்டு மைசூரில் மன்னர் ஆட்சியும், தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சியும் இருந்த காலந்தொட்டு, மத்திய அரசு 1972-ஆம் ஆண்டு நியமித்த காவிரி உண்மை அறியும் குழுவின் அறிக்கையின்படியும், காவிரி நடுவர் மன்றத்தில் தமிழகம், கர்நாடகம் மாநிலங்கள் வைத்த வாதங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள தீர்ப்புகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடுதான் என்பது நன்கு விளங்கும். கடந்த 50 ஆண்டுகளாக கர்நாடகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்தோர் காவிரி பிரச்னையில், மத்திய ஆட்சியாளர்களின் துணையுடன் தமிழகத்தின் தொன்மையான உரிமைகளை பெருமளவில் பறித்துக் கொண்டனர். கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே உபரி நீரை திறந்து விட்டு தமிழகத்தை வடிகாலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரு முக்கிய ஒப்பந்தங்கள்: கர்நாடகத்தில் பொதுப் பணித் துறையால் செயல்படுத்தப்பட்ட நீர்ப் பாசன மேம்பாட்டுப் பணிகளின் அவசியம் கருதி, 1872-ஆம் ஆண்டு தனியாக பாசனத் துறை உருவாக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் காவிரி பிரச்னை தொடர்பாக தீவிரமாக ஆலோசித்த இரு மாநில அதிகாரிகளும், மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவெடுத்தனர்.

அதன்படி சென்னை மாகாணம் சார்பில் ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் எச்.இ.ஸ்டோக்ஸ் என்பவரும், அப்போதைய நீர்ப் பாசனத் துறை தலைமைப் பொறியாளர் ஜி.டி.வால்ச் என்பவரும், மைசூர் சமஸ்தானம் சார்பில் அதன் நிர்வாகி ஆலிவர் செயின்ட் ஜான், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சமஸ்தான திவான் கே.சேஷாத்ரி அய்யர், தலைமைப் பொறியாளர் கர்னல் சி.போவன் ஆகிய மூவர் குழு 1890-ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்ட நிலையில், 1891-ஆம் ஆண்டு மீண்டும் உதகமண்டலத்தில் இரண்டாவது மாநாட்டைக் கூட்டி தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக உருவானதுதான் 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தம்.

அதன்படி சென்னை மாகாணம் தன்வசம் உள்ள 13.45 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவுக்கு 366.9 டிஎம்சி தண்ணீரை உபயோகிப்பது எனவும், மைசூர் மாகாணம் தன்வசமுள்ள 1.11 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு விளை நிலங்களுக்கு 27.2 டிஎம்சி தண்ணீரை உபயோகித்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு, 1900-ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடகம், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தவிர்த்து, வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து பாசனப் பரப்பை அதிகரிக்க திட்டமிட்டு 1910-ஆம் ஆண்டு இருமாநில அதிகாரிகளும் இணைந்து பேசி காவிரியின் குறுக்கே மேட்டூர் அருகில் தமிழகத்துக்கு ஒரு அணையும், கர்நாடகத்துக்கு கண்ணம்பாடி அணையும் (கிருஷ்ணராஜ சாகர்) கட்ட திட்டம் உருவாக்கப்பட்டு, மத்திய ஆட்சியாளர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் விளைவாக உருவானதுதான் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம்.

Newsletter