சொட்டு நீர் பாசனத் திட்டத்துக்கு ரூ.5,000 கோடி: மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட சிறிய அளவிலான நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு ரூ.5,000 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட சிறிய அளவிலான நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு ரூ.5,000 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறிய அளவிலான நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதி அடுத்த 2 ஆண்டுகளில் நபார்டு வங்கி மூலம் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும். இதன் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருவாயும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது நமது நாட்டில் சொட்டு நீர் உள்ளிட்ட சிறிய அளவிலான பாசனத் திட்டங்கள் மூலம் 1 கோடி ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்தப் பாசனப் பரப்பை 5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறிய அளவிலான பாசனத் திட்டங்களை மேற்கொள்ள 3 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் அளிக்கப்படும்.

சொட்டு நீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை தகவல் தொடர்புக்கு ரூ.11,330 கோடி: பாதுகாப்புத் துறையின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூடுதலாக ரூ.11,330 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பாதுகாப்புத் துறையின் தகவல் தொடர்புக்கு மொத்தம் ரூ.24,664 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை மூலம் ராணுவத் தகவல் தொடர்பு சேவைகளுக்குத் தேவையான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் வாங்கப்படும். இந்த ராணுவ தகவல் தொடர்பு மேம்பாட்டுத் திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்கப்படும்.

அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல்: மத்திய ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலை மாற்றியமைப்பதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. நாட்டில் ஹோமியோபதி மருத்துவத்தை நிர்வகித்து வந்த இந்தக் கவுன்சில் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதனை மாற்றி அமைக்க அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. எனினும், இந்த அவசரச் சட்டத்துக்கு எப்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை: தேசிய உயிரி எரிபொருள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அழுகிய உருளைக் கிழங்கு, சோளம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவற்றில் இருந்து எத்தனால் எடுக்க முடியும். 

இப்போதைய நிலையில் கரும்புச் சக்கையில் இருந்து மட்டுமே எத்தனால் எடுக்கப்பட்டு வருகிறது. இது பெட்ரோலுடன் கலக்கப்பட்டு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. புதிய கொள்கை அமல்படுத்தப்படுவதால் ரூ.4,000 கோடி அளவுக்கு எரிபொருள் இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ஆந்திரத்தில் ரூ.450 கோடி செலவில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கவும் அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Newsletter