நாற்றங்காலில் நூற்புழுக்கள் : விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை., எச்சரிக்கை

கோவை : பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் அதிகளவில் பரவுவதால், நாற்றுக்களைக் கண்காணிப்புக்கு உட்படுத்தாமல் நடவு செய்ய வேண்டாம் என விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை : பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் அதிகளவில் பரவுவதால், நாற்றுக்களைக் கண்காணிப்புக்கு உட்படுத்தாமல் நடவு செய்ய வேண்டாம் என விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முதுகெலும்பற்ற பல செல் விலங்குகளே உலகில் எண்ணிலடங்கா அளவில் உள்ள உயிரினமாகும். மண்ணை உறைவிடமாகக் கொண்டு வாழும் இவை உருவில் மிக நுண்ணியவையாயினும், நுண்ணுயிரிகளாக வகைப்படுத்தப்படவில்லை. இவ்வகையான நூற்புழுக்கள் வேறின் சாற்றுக் குழாய்களின் அமைப்பில் அதிக அளவில் ஏற்படுத்தும் மாற்றங்களே, அவற்றின் நீருறிஞ்சு திறனைப் பெருமளவில் பாதிக்கும் வல்லமை கொண்டவை. இதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் நீர் உறிஞ்சப்படுவது தடைப்படுகின்றது. இந்த வகையான நூற்புழுக்கள் உருண்டை வடிவமாகவோ அவரை வடிவத்திலோ இருக்கும்.



பெரும்பாலான பழமரப்பயிர்கள், விதையில்லா முறையிலேயே தாவர இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. வேர்க்கிளைப்புத் தொடங்கியவுடன் பதியன்கள் சொந்த மண்ணைக் கொண்டு நெகிழிப் (பாலிதீன்) பைகளில் தோற்றுவிக்கப்படுகின்றன. சாதாரணமாக, இந்த நிகழ்வுகள் அனைத்தும் தோற்றுவிக்கப்பட்ட பழப்பண்ணை வளாகத்திலேயே நடைபெறுகின்றன. ஏற்கனவே, நூற்புழுக்களைக் தன்னகத்தே கொண்டுள்ள இந்த சொந்த மண், உற்பத்தியாகும் புதிய நாற்றுக்களில் நூற்புழுத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. இதுவே, நூற்புழுப் பரவுவதற்கு மூலகாரணமாகும். விண் பதியன்களைவிட மண் பதியன்களிலேயே வேர்முடிச்சு நூற்புழுத்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 

ஏனெனில், இதில் வேர்கள் நூற்புழுக்கள் உள்ள சொந்த மண்ணில் நேரடியாகப் பதிந்து உள்ளது. கருநெகிழிப் பைகளில் பொதிந்து உள்ள பதியன் வேர்களில் ஏற்கனவே ஏற்பட்ட நூற்புழுத்தாக்கமும், அதில் உள்ள இறுகிய மண்ணில் புறச் சாருண்ணி நூற்புழுக்களும் அதிக அளவில் உள்ளன. இவ்வகை நாற்றுக்கள் எப்போதுமே நூற்புழுக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாமல் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கும் நடவுக்கும் அனுப்பப்படுவதால் இவற்றில் நிறைந்துள்ள பயிரை தாக்கும் நூற்புழுக்கள் புதிய பகுதிகளுக்கு எளிதில் பரவுகின்றன. மேற்கண்ட தகவலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறைப் பேராசிரியர் கே. பூர்ணிமர் மற்றும் முனைவர் மற்றும் தலைவர். ச. சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தனர். நாற்றுக்களைப் பெரிய அளவில் வாங்கும் முன் ஒரு சில நாற்றுக்களைப் பரிசோதனை செய்ய அனுப்பவும். 

Newsletter