நெல்லுக்கு போதிய விலை இல்லை: கவலையில் விவசாயிகள்!

நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என தாமிரவருணி பாசன விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

நிகழ் பிசானப் பருவத்தில் ஒன்றரை மேனி மகசூல் கிடைத்தும் நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என தாமிரவருணி பாசன விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தாமிரவருணி பாசனத்தில் பாபநாசம் அணையின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 86,107 ஏக்கர் நிலங்களும், மணிமுத்தாறு பிரதான கால்வாய் பாசனத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. பருவமழை பொய்த்ததால் 2016 இல் பிசான பருவமும், 2017 இல் கார் பருவமும் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவானது. இருப்பினும், 2017, அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை கைகொடுத்தது. வழக்கமான அளவைவிட 33 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் கணிசமாக நீர் இருப்பு இருந்தது.

இப்பாசனத்தில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முழு அளவில் நெல், வாழை போன்றவை பயிரிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்து வருவதால் விவசாயிகளும் குறுகிய கால நெல் ரகங்களை அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர். நிகழ் பருவத்தில் வறட்சியான பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது. தற்போது பிசான பருவ அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் பாசனத்தில் அறுவடை தீவிரமடைந்துள்ளது. தாமதமாக நடவு செய்த பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் பாசனத்தில் நெற்பயிரில் கதிர் பிடிக்கும் நிலையில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் அறுவடை தொடங்க 3 வாரங்களுக்கு மேல் ஆகலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேபோல், வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளில் தாமதமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், நெல் பயிரிடுவதும் தாமதம் ஏற்பட்டது.

இவ்விரு மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லுக்கு போதிய விலை இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். அறுவடை செய்யும் வயலுக்கே சென்று வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். வியாபாரிகள் 75 கிலோ மூட்டைக்கு அதாவது ஆடுதுறை 45 போன்ற சன்னரக நெல்லுக்கு ரூ. 950, ஆந்திரா, கர்நாடகா பொன்னி ரகங்களுக்கு ரூ. 1100 என விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ் பருவத்தில் நெல் பயிரிட்டு ஒன்றரை மேனி மகசூல் கிடைத்த போதிலும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போதுள்ளஅரிசி விலை, இடுபொருள்களின் விலையின் அடிப்படையில் நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரம் கிடைத்தால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். அரசு கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் (100 கிலோ) ரூ. 1660 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடைமுறை செலவு, கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் போன்ற கட்டுப்பாடுகளால் விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க முடியாமல் திணறி வருகின்றனர்.

விலை நிர்ணயம் செய்ய முத்தரப்புக் குழு தேவை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வேலுமயில் கூறியது: அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் சரியான நேரத்தில் தேவையான ஊர்களில் திறக்கப்படவில்லை. மேலும், கட்டுப்பாடுகளால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொடுப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே அரசு நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணமும் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆகவே, நெல் கொள்முதல் நிலையங்களில் எளிய முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

விவசாயிகள், வியாபாரிகள், அரசு என முத்தரப்புக் குழு அமைத்து விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை அரசு கொண்டு வர வேண்டும். விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவில் இருந்து 50 சதவீதம் கூடுதலாக விலை வழங்க வேண்டும் என்ற வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் பரிந்துரையை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

Newsletter