மானாவாரி பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகள்: கட்டுப்படுத்தும் முறைகள்

ஒருங்கிணைந்த முறையில் மானாவாரி பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால், கூடுதல் மகசூல் பெறுவதுடன், அதிக வருவாய் ஈட்டலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் சங்கர், தலைவர் அகிலா ஆகியோர் தெரிவித்தனர்.

நாமக்கல்: ஒருங்கிணைந்த முறையில் மானாவாரி பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால், கூடுதல் மகசூல் பெறுவதுடன், அதிக வருவாய் ஈட்டலாம் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் சங்கர், தலைவர் அகிலா ஆகியோர் தெரிவித்தனர்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள்: பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான பச்சை தத்துப்பூச்சி, இலைப்பேன், அசுவினி, மிரிட் நாவாப்பூச்சி, பருத்தி மாவுப்பூச்சி, பப்பாளி மாவுப்பூச்சி, வெள்ளை ஈ, பச்சை கொடுக்கு நாவாப்பூச்சி மற்றும் கருப்பு நிற நாவாப்பூச்சி ஆகியவை அதிகளவில் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன.

பச்சை தத்துப்பூச்சி: பருத்திச் செடிகளில் உள்ள சாற்றினை தத்துப் பூச்சிகளின் இளம் மற்றும் முதிர் உயிரிகள் உறிஞ்சுவதோடு, ஒரு வகையான நச்சுப்பொருளை இலையின் மீது சுரப்பதால், இலைகள் சிவப்பு நிறமாக நெருப்புப் போன்ற தோற்றமாகவும், கரடுமுரடாகவும் காணப்படுகின்றன.

அசுவினி: அசுவினியின் இளம் மற்றும் முதிர் உயிரிகள், பருத்திச் செடியின் நுனிப் பகுதிகளில் தாக்கி சாற்றினை உறிஞ்சுவதால், செடிகளின் வளர்ச்சி குன்றுதல், இலைகள் இளம் மஞ்சள் நிறமாக மாறி சுருண்டு காய்ந்து விழுதல், இவை சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் கரும்படல நோய் ஏற்பட்டு, இலைகளின் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதோடு, பஞ்சின் தரமும் பாதிக்கப்படுகிறது.

வெள்ளை ஈ: இளம் மற்றும் முதிர் உயிரிகள், இலைகளின் அடிப் பகுதியில் இருந்து கொண்டு, சாற்றினை உறிஞ்சுவதால், இலைகள் நிறம் மாறுவதோடு, கரும்படல நோயும் ஏற்பட்டு, இலைகளில் இலைச்சுருள் வைரஸ் நோயினையும் பரப்புகின்றன.

இலைப்பேன்: இலைகளின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சுகின்றன. அதனால், இலைகளின் ஓரங்கள் சுருங்குதல், பழுப்பு நிறமாக மாறுதல், இலைகளின் அடிப்புறத்தில் இளம் வெண்மை நிறப் புள்ளிகள் தோன்றுதல் மற்றும் இலைக்கோடு வைரஸ் நோயைப் பரப்புகின்றன.

மாவுப்பூச்சி: மாவுப்பூச்சி தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் மற்றும் நுனிப் பகுதிகள், ஒழுங்கற்ற வடிவத்துடனும், வளர்ச்சிக் குன்றியும், கொத்தாகவும் காணப்படும். மேலும், இவை தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், இலைகளில் கரும்படல நோயினைத் தோற்றுவித்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது.

இவை செடிகளின் தண்டு, இலை, நுனிப் பகுதிகள், மலர்கள், சப்பைகள் ஆகியவற்றில் இருந்து கொண்டு, சாற்றினை உறிஞ்சுவதால், வளர்ச்சி குன்றியும், செடிகள் காய்ந்து அழியும் தன்மையையும் ஏற்படுத்துகின்றன.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்: ஆழமாக உழவு செய்யும் சட்டிக் கலப்பை, உளிக் கலப்பை ஆகியவற்றை கொண்டு உழவு செய்யும் போது, மண்ணில் புதைந்து காணப்படும் தீங்கு விளைவிக்கும் பூச்சி முட்டைகள் மற்றும் இளம் பருவங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.

சாறு உறுஞ்சும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட சான்று அளிக்கப்பட்ட பீ.டி., கலப்பினங்களைத் தேர்வு செய்து பயிரிட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரம் இடுதல் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலை வெகுவாகக் குறைக்கலாம்.

துவரை வயலைச்சுற்றி 2 சாலைகள் நடவு செய்து பூச்சிகளின் தாக்குதலைக் கண்காணித்து, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்தலாம். வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகளை ஒரு ஹெக்டேருக்கு 14 வரை பொருத்த வேண்டும்.

விதை நடவு செய்த 45 நாள்களுக்கு பின், பருத்தி வயல்களில் விளக்குப் பொறிகளைப் பொருத்தி சாறு உறிஞ்சும் பூச்சிகளைச் சேகரித்து அழிக்கலாம். பப்பாளி மாவுப்பூச்சி தாக்கிய பருத்தி வயல்களில், அசிரோபேக்ஸ் பப்பாயே என்ற பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணியை, ஓர் ஏக்கருக்கு 250 என்ற எண்ணிக்கையில் வெளியிட்டு, கட்டுப்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பபில், ரசாயன பூச்சிக் கொல்லிகளை பூச்சிகளின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த முறையில் மானாவாரி பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால், கூடுதல் மகசூல் பெறுவதுடன் அதிக வருவாய் ஈட்டலாம் என்றார்.

Newsletter