வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் - மத்திய அமைச்சர் பாஸ்வானுக்கு வல்லுனர் குழு பதில்!

கடந்த ஆண்டு அதிக உற்பத்தியால் விலை வீழ்ச்சி அடைந்து, விவசாயிகள் தெருவில் கொட்டும் நிலை ஏற்பட்டது. விவசாயிகளுக்கு மிகுந்த நட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி குறைந்து வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து நுகர்வோர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இந்நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்துவது எங்கள் கைகளில் இல்லை- அதற்கான தீர்வு இருந்தால் வரவேற்கிறேன் என மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தீவிர விவாதம் நடந்து வரும் நிலையில், 16+ ஆண்டு முயற்சியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டமிடுதலில் இருந்து விற்பனைசெய்யும் வரையிலான சேவைகளை கிராம அளவில் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்தை உருவாக்கி, சோதனை முறையில் வெற்றிபெறச்செய்து, முப்பதுக்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளின் சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருக்கும் தமிழகத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் குழு மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களின் அழைப்பை ஏற்று உணவுப்பொருள்களின் விலையை சரியாக நிர்வகித்து நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட தீர்வை அரசுக்கு சமர்ப்பிப்பதில் மனநிறைவு அடைகின்றது.

சென்ற ஆண்டு வெங்காய விலை வீழ்ச்சியை பார்த்த அதிர்ச்சியில், வெங்காயம் பயிரிடும் பல விவசாயிகள் இம்முறை வெங்காயத்தை விடுத்து வேறு பயிருக்கு மாறியது வெங்காய உற்பத்தி குறைந்ததற்கான முக்கியக் காரணம். இந்த முறை அதிக விலையை அறிந்த விவசாயிகள் அடுத்த முறை தேவையை விட அதிக அளவில் பயிரிடக்கூடிய வாய்ப்பு மற்றும் விலை வீழ்ச்சி. விவசாயத்தின் பின்னடைவுக்கு இந்த நிலையில்லாத்தன்மையும் மிக முக்கிய காரணம்.

தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 16+ வருட முயற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல் மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடின தன்மையை இலகுவாக்கும், ஒரு புது, இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கினோம்.

உணவுப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கு முக்கிய காரணம், தற்போதைக்கு விளைந்து கொண்டிருக்கும் பொருள்களின் தகவல் (live crop variety production data) இல்லாததுதான். எங்கள் திட்டத்தின் அடிப்படை விஷயங்களில் ஒன்று, கிராம அளவில் அன்றன்று பயிரிடப்படும் தகவல்கள் இணையத் தகவல்களாக மாற்றப்பட்டு, தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யக்கூடிய திறனை விவசாயிகளுக்கு வழங்குவதுதான்.

நாங்கள் உருவாக்கியுள்ள தீர்வு செயல்படும் விதம்

விவசாய பிரச்னைக்கான நிரந்தர தீர்வு கிராம அளவில் விவசாயத் தொழிலை வெற்றிகரமாக செய்து முடிக்கத்தேவைப்படும் கட்டமைப்பை, வசதிகளை, சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதில்தான் உள்ளது. நாங்கள் முன்வைக்கும் இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட டீம் இருக்கும்.

விவசாயிகள் இவர்களின் துணையோடு -

• வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள்

• தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற விபரம், தான் அப்பயிரை தேர்வு செய்தால் அறுவடை செய்யும் காலத்தில் அதற்கு இருக்கும் தோராயமான தேவை (ஏற்கனனவே தேவைக்கு ஏற்ற அளவு, மற்ற விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்தால், தானும் அதை தேர்வு செய்யாமல் இருக்கும் நிலை அப்போதுதான் உருவாகும்). ஒரு கிராமத்தில் சராசரியாக முன்னூறு விவசாயிகள் இருக்கின்றார்கள் என்று கொண்டால் கூட அவர்கள் என்ன பயிர் செய்ய விரும்புகிறார்கள், என்ன பயிர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் போன்ற தகவல்களை தகவல் மையத்தில் பணிபுரியும் அலுவலர் இணையதள தகவலாக பதிவுசெய்வது எளிது.

• தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான பரிந்துரைகள், சிறப்பான நீர் மேலாண்மை, சிறப்பாக செயல்படக்கூடிய நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் போன்ற முக்கிய தவல்களைப் பெறலாம்.

மேலும்,

 

• விதை, உரம் போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட்ட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி

• தனது ஊரில், வேலை ஆட்கள் மட்டும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில் அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி

• முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல்; தான் பயிரிட்ட பயிர் மற்ற விவசாயிகளால் எவ்வளவு ஏக்கரில் பயிரிடப்பட்டது, தற்போது எத்தனை ஏக்கர் அறுவடை செய்யப்பட்டுவிட்டது, இன்னும் எவ்வளவு ஏக்கர் அறுவடை செய்யப்படவேண்டி இருக்கிறது போன்ற தகவல்களை ஆராய்தல் மூலம் விவசாயிகள் அறுவடை தேதி, உடனே விற்கலாமா, கொஞ்சம் தாமதிக்கலாமா அல்லது கிட்டங்கிகளில் பாதுகாக்கலாமா என்பவற்றில் சரியான முடிவு எடுக்கலாம்; நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை செய்துகொள்ள முடியும்

• விவசாயிகளின் தகவல்களை சரியாக ஒருங்கிணைப்பது மூலம் சிறு குறு விவசாயிகளது குறைந்த அளவிலான தேவைகளையும் (தரமான இடுபொருள்களை கிராம அளவில் பெற்றுக்கொள்ளும் வசதி மற்றும் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பு) வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொள்ள வைக்க முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.

இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கை தரம் முன்னேறும்.

Newsletter