இயற்கை விவசாயம் காக்க 10,000 விதைப்பந்துகள்!

திருச்சி உறையூரைச் சேர்ந்த ஸ்ரீகணேசன், 10,000-க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளைத் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறார். இது பற்றி, அவரே கூறுகிறார்:

"மரக்கன்றுகளை நடுவது-பராமரிப்பதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க விதைப்பந்து தயாரிக்கும் யோசனை வந்தது. சாதாரணமாக ஒருநாளைக்கு 200 முதல் 500 விதைப் பந்துகளைத் தயாரிப்பேன். சில நாள்கள் மற்ற பணிகளை ஒதுக்கிவிட்டு, 800 விதைப் பந்துகள் கூட தயாரித்திருக்கிறேன்.இப்படி சுமார் 10,000 விதைப் பந்துகள் தயாரித்திருப்பேன். களிமண்ணால் ஆன பந்தில் வாழாங்கொட்டை, நாகப் பழக்கொட்டை, புளியங்கொட்டை, கொய்யா என விதவிதமா விதைகளை வைத்து பந்துகளை தயாரிப்பேன்.

விதைப்பந்துகளை நடுவது பெரிய வேலை. விநாயகர் சதுர்த்தி முதல் விநியோகம் செய்ய ஆரம்பித்தோம். விவசாயிகள், பொதுமக்கள், எங்களது பாரதிய கிசான் சங்கப் பொறுப்பாளர்கள், பள்ளிக்கூடங்கள் என விநியோகித்து வருகிறோம். ஓரிருவர் தான் 2,000, 3,000 என விதைப் பந்துகளை வாங்கிச் செல்வர். பல இடங்களில் 200 விதைப் பந்துகளை வாங்கிச் சென்று நட்டனர். நான் சுற்றுப்பயணம் போகுமிடமெல்லாம் பைகளில் 100, 50 என எடுத்துச் செல்வேன். பல இடங்களில் உற்சாகமாக விதைப் பந்துகளை நட்டு வருகின்றனர்.

விதைப்பந்துகள் தயாரிப்பது சுலபம் தான். குறைந்த நேரத்தில் இருந்த இடத்திலேயே தயாரித்துவிட முடியும்'' என்கிறார் ஸ்ரீகணேசன்.

Newsletter