சாலையோரங்களில் அதிகளவில் வளர்ந்துள்ள மருத்துவ குணம் கொண்ட துத்திச்செடிகள்!

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் சாலையோரங்களில் அதிகளவில் பூத்துக்குலுங்கும் துத்திச்செடிகளை மூலநோய்க்கு பொதுமக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் தொடர் மழைக் காரணமாக சாலையோரங்களில் துத்திச்செட்டிகள் ஆளுயரத்துக்கு வளர்ந்து புதர் போல் காணப்படுகின்றன. இந்த செடி, சிறந்த மூலிகையாக சித்தமருத்துவத்தில் கூறப்படுகிறது.

துத்திச்செடிகளில் கருந்துத்தி, பெருந்துத்தி, சிறியத் துத்தி, நாட்டுத்துத்தி, காட்டுத்துத்தி, நிலத் துத்தி என 29 வகைகள் உள்ளன. துத்திச்செடி, அதன் வேர், விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.

உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.துத்தியை குளிர்ச்சித் தரும் மூலிகை என்கிறார் அகத்தியர்.

துத்தியின் மருத்துவ குணங்களை தெரிந்த இப்பகுதி மக்கள் அதனை நேரிடையாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் துத்திச்செடிகளை பொதுமக்கள் மூலநோய்க்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய அரசு சித்த மருத்துவர் ஆனந்த் கூறியது: துத்திச்செடி , மால்வேசி என்ற தாவரக் குடும்பத்தையும், வெண்டைக்காய் குடும்ப வகையைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் அபுத்திலான் இண்டிகம் ஆகும். மழைக்காலத்தில் அதிகளவில் வளரும். துத்திச்செடி இலைகளை மூலநோய் கண்ட இடத்தில் அரைத்துக்கட்டும் வழக்கம் உள்ளது. இதனைப் பச்சையாகவும் சாப்பிடலாம். கஷாயமாகவும் அருந்தலாம் என்றார்.

Newsletter