பிசான பருவத்தில் இயந்திர நெல் நடவு!

திருநெல்வேலி: நிகழ் பிசான பருவத்தில் விவசாயிகள் இயந்திர நெல் நடவு முறையைப் பின்பற்றி குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயிகள் பிசான பருவ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆள் பற்றாக்குறை, கூடுதல் செலவினம் போன்ற காரணத்தால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இப்பிரச்னையை சமாளிக்க விவசாயிகள் இயந்திர நெல் நடவு முறையைக் கடைப்பிடித்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.

இயந்திர நடவுக்கு வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. வேளாண்மையில் இயந்திரத் தொழில்நுட்பம் அதிகரித்து வருவதால், விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி செலவினங்களைக் குறைக்கலாம். 

இயந்திர நடவு: சான்று பெற்ற விதைகளை ஏக்கருக்கு 3 கிலோ எனப் பயன்படுத்தி ஒரு சென்ட் பரப்பில் (40 ச.மீ.) பாய் நாற்றங்கால் அல்லது நாற்றங்கால் தட்டுகளில் நாற்றுவிட வேண்டும். நன்கு சமன் செய்த நடவு வயல்களில் 10 முதல் 14 நாள் வயதுடைய நாற்றுகளை, ஒரு குத்துக்கு ஒன்று வீதம் வரிசைக்கு வரிசை முக்கால் அடி (22.5 செ. மீ.), குத்துக்கு குத்து முக்கால் அடி (22.5 செ. மீ.) என, சதுர நடவாக நடவேண்டும். நிலத்தில் 2.5 செ.மீ. உயரத்துக்கு மட்டும் நீரைத் தேக்க வேண்டும்.

நடவு செய்த 10ஆம் நாளிலிருந்து 10 நாளுக்கு ஒருமுறை என 4 முறை கோனோவீடர் களைக்கருவி அல்லது விசைக் களைக் கருவியை குறுக்கும் நெடுக்குமாகப் பயன்படுத்தி களைகளை நிலத்துக்குள் அமுக்கிவிடவேண்டும்.

இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி நிறச்செறிவு நன்கு இருக்குமாறு தேவைக்கு தழைச்சத்து உரமிட வேண்டும்.

நன்மைகள்: விதையின் அளவும், விதைச் செலவும் குறைவு. ஓர் ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதும். நடவு நேரத்தில் ஆள் கிடைக்கவில்லை என்ற அச்சம் தேவையில்லை. நடும் செலவு குறைவு. சீரான நடவு, களைக் கருவி மூலம் களையை மண்ணுக்குள் அமுக்கிவிடுவதால் தழை உரமாகிறது. களையெடுக்கும் ஆள் செலவு குறைகிறது.

களையெடுக்கும் கருவியை குறுக்கும் நெடுக்குமாக இயக்குவதால் வேர்களின் வளர்ச்சி, வேர்கள் அதிகரித்து உரச் சத்துகளை எடுத்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. 

இதனால் அதிக தூர்கள், அதிக கதிர்கள், அதிக நெல் மணிகள், அதிக மகசூல், அதிக வைக்கோல் என நெல் சாகுபடி மகசூல் அதிகரிக்கிறது.

களை முளைக்குமோ என்ற அச்சமின்றி, நீர்மறைய நீர்கட்டுவதால் 40 சதவீதம் பாசனநீர்த் தேவை குறைகிறது. மோட்டார் பயன்படுத்தும் பகுதிகளில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மோட்டார்களுக்கு டீசல் பயன்பாடு குறைகிறது. பயிர்கள் சாயாமல் திரட்சியாக இருக்கும். 

மானியம்: இயந்திர நடவு முறையால் பல நன்மைகளும், மகசூல் அதிகரிப்பும் உள்ளதால் லாபம் கிடைக்கிறது. இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நெல் இயக்கத்தின் கீழ் வேளாண் துறை மூலம் ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் நடவுக்குப் பிந்தைய மானியாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் பரப்புக்கு இந்த மானிய உதவி வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தில் நாற்றங்காலுக்குத் தேவையான நாற்றங்கால் தட்டுகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 

இயந்திர நடவு முடிந்ததும் அரசு வழங்கும் மானியம் பெற குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நில உரிமை இயந்திர நடவு செய்த பரப்பளவைக் குறிக்கும் அடங்கல், வங்கிக் கணக்கு விவரம், மார்பளவு புகைப்படம் 2, நடவு முடிந்த பின்னர், விவசாயி அந்த வயலில் நிற்கும் புகைப்படம் ஆகியவற்றுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம்.

Newsletter