பாசன நீர் பற்றாக்குறைக்கு சொட்டு நீர் பாசனமே தீர்வு - தெலுங்கானா மாநில வேளாண் துணை வேந்தர்

கோவை, நவம்பர் 7: பாசன நீர் பற்றாக்குறைக்கு சொட்டு நீர் பாசனமே தீர்வு என தெலுங்கானா வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் வி.பிரவீன்ராவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மொத்த பாசனப் பரப்பில் தெளிப்பு நீர் மற்றும் சொட்டுநீர் பாசன முறைகளை உள்ளடக்கிய நுண்ணீர் பாசன முறைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இவற்றில் தெளிப்பு நீர்ப்பாசனம் 18 சதமும், சொட்டு நீர்ப்பாசனம் 4 சதமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் உற்பத்தியில் தற்போது நிலவி வரும் சவால்களைச் சமாளிக்கும் வகையில் சொட்டு நீர்ப்பாசனத்தை உபயோகிப்பது" குறித்த சிறப்புரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையை .பிரவீன்ராவ் நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசுகையில், நீரின் சிறப்பம்சங்களையும், தற்போதைய சூழலில் சொட்டு நீர் பாசனத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

முன்னதாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் கு.ராமசாமி, பாசன நீரின் முக்கியத்துவத்தையும், இன்றைய காலகட்டத்தில் நீரை சேமிக்கும் முறைகளைக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.



இந்நிகழ்வில், வேளாண் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவனப்பன் அறக்கட்டளையினை நிறுவ நிதியுதவியளித்த நீர் நுட்பமைய முன்னாள் நிறுவனர் இயக்குநரும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முன்னாள் முதல்வருமாகிய பேராசிரியர் ஆர்.கே.சிவனப்பன் கௌரவிக்கப்பட்டார்.

முன்னதாக, சுமார் 150-க்கும் மேலான முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக முன்னாள் மற்றும் இன்னாள் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வின் துவக்கத்தில் நீர் நுட்பமைய இயக்குநர் பா.செ.பாண்டியன் வரவேற்புரையாற்றினார். இறுதியில் முதுநிலை இயக்குநரகத்தின் முதன்மையர் யு.சிவக்குமார் நன்றியுரையாற்றினார்.

Newsletter