வைகை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து புதன்கிழமை முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார்.

தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததாலும், மூல வைகையில் இருந்து நீர் வரத்து இல்லாததாலும் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரை வைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 55.64 அடியை எட்டிப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையேற்று புதன்கிழமை (நவ. 1) முதல் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து புதன்கிழமை இந்த அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக 900 கன அடி தண்ணீரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவிட்டார்.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமார், எம்எல்ஏக்கள் ஜக்கையன், ராஜன் செல்லப்பா, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter