வேளாண் பல்கலையில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கருத்தரங்கு


பேராபத்தை சந்தித்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பசுமைப் பொறியியல், திடக்கழிவு மேலாண்மை, ஆற்றல் தணிக்கை, மாசுக் கட்டுப்பாடு போன்ற பல துறைகளில் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் வேளாண் பல்கலையில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவு மாணவர்களால் ஈக்கோ ஃபெஸ்ட்’17 எனும் தலைப்பில் பத்தாவது தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.



பேண்தகைமைக்கான தேடல் எனும் அடைமொழியுடன், உலக பேண்தகைமைக்கான தேடலுக்கு உதவும் பொருட்டும், தேசிய அளவில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் மாணாக்கர்களின் அறிவாற்றலையும் செயலாற்றலையும் வெளிக்கொணரும் பொருட்டும் இந்த கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டது.

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் வழங்கப்படும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் எனும் பாடம், பாதிப்புகளில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க, உபயோகத்தில் உள்ள ஆற்றல் மூலங்கள், ஆற்றலுக்கான மாற்று மூலங்கள் குறித்த தெளிவை ஏற்படுத்தி மாணவர்களை தயார் படுத்தி வருகின்றது. பேராபத்தை சந்தித்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பசுமைப் பொறியியல், திடக்கழிவு மேலாண்மை, ஆற்றல் தணிக்கை, மாசுக் கட்டுப்பாடு, தொலையுணர்வு போன்ற பல துறைகளில் மாணவர்கள் கைதேர்ந்து வருகின்றனர்.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கோவை தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியக முதன்மை வனப்பாதுகாப்பாளர் மற்றும் கூடுதல் இயக்குநர் வி. திருநாவுக்கரசு கலந்துகொண்டு நிகழ்வினைத் துவக்கி வைத்து பேண்தகைமைக்கான பொருளை விளக்கினார். 



இதனைத்தொடர்ந்து, நீர்நுட்பவியல் மைய இயக்குநர் பி.ஜே. பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், சமகாலத்தில் சுற்றுச்சூழல் சந்தித்து வரும் ஆபத்துகள் குறித்தும் மாணவர்களின் பொறுப்புகள் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

தலைமையுரை நிகழ்த்திய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.இராமசாமி, உலகை பசுமையாக்குதல் குறித்த முக்கியத் துவத்தையும், இந்நோக்கத்தில் மாணவர்கள் தங்களது சிந்தனையினை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.



நிறைவாக, இறுதியாண்டு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவு மாணவர் தன்வந்த் நன்றியுரை வழங்கினார்.

Newsletter