வெட்டுக்கிளிகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார்

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்களில் தற்போது அதிகளவிலான வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்து பயிர்களை சேதம் செய்து வருவதாகவும், இதுகுறித்து வன மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரிசி, கரும்பு, சோளம், கம்பு உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கோவையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பூச்சிகள் தற்போது, விவசாயிகளுக்கு பெரும் இடையூறாகமாறி பயிரிடப்பட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலப்பரப்பில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி எஸ்.கோகுல் கூறுகையில், "எனது 5 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிட்டேன். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து 2 ஏக்கர் பரப்பளவிலான விதைக்கப்பட்ட தானியங்கள் சேதமடைந்துவிட்டது. இந்த வகையான பிரச்சனைகளை முதன்முறையாக நான் சந்திக்கிறேன். ஏனென்றால் எனது விவசாய நிலத்தில் வெட்டுக்கிளிகளால் எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது என் பயிர்களுக்கு இதுபோன்ற எதிரிகள் உருவாகியுள்ளது வேதனையளிக்கிறது" என்றார்.

தொண்டமுத்தூர் அருகே உள்ள விவசாயி ஜே.கார்த்திக் கூறுகையில், "இங்கே பாம்புகள் உள்ளிட்டவற்றால் மட்டுமே பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெட்டுக்கிளிகளினாலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அது முழுமையான தீர்வைத் தருவதில்லை" என்றார்.

இதுகுறித்து இந்திய அரசு வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் என்.செந்தில்குமார் நமது சிம்ப்ளிசிட்டி நிருபருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-



"விவசாய நிலங்களை பாதிக்கும் இதுபோன்ற காரணிகளை முக்கிய பிரச்சனையாக கருத வேண்டும். ஏனெனில், இதனை ஆரம்பகட்டத்திலேயே சரிசெய்யாவிட்டால் அது மிகப்பெரிய பாதிப்பையும், இழப்பையும் ஏற்படுத்தும். வெட்டுக்கிளிகளை எளிதில் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் பல வழிமுறைகள் உள்ளன.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இரண்டு தீர்வுகள் உள்ளன. முதலில் நாம் வெட்டுக்கிளிகளை பிடிக்க ஒளி வலையினை பயன்படுத்தலாம். அடுத்தது, விவசாய நிலங்களிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள புல்வெளிகளை சுத்தம் செய்ய வேண்டும். இதனை மேற்கொள்ளும் போது விவசாய நிலங்களுக்குள் இதுபோன்ற பூச்சிகள் ஊடுருவுவதை தடுக்க முடியும்.



வெட்டுக்கிளிகளை ஒளிசக்தியைப் பயன்படுத்தி கைப்பற்றுவதன் மூலம் அது இறந்துவிடும். இறந்த வெட்டுக்கிளிகளை பயிர்களுக்கு யூரியாவாகப் பயன்படுத்தலாம். ஏனென்றால் வெட்டுக்கிளிகள் புரதம் நிறைந்தவை" என்றார்.

Newsletter