பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு பற்றிய அக்டோபர் (2017) மாதத்திற்கான முன்னறிவிப்பு

நெல், பருத்தி, கரும்பு, வாழை, நிலக்கடலை போன்ற பயிர்களை காப்பது குறித்த இந்த மாதத்திற்கான முன்னறிப்பை தமிழ்நாடு வேளாண்மைக் பல்ககலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், 

நெல்: தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, சேலம், கன்னியாகுமரி, தேனி, நாகப்பட்டினம், விழுப்புரம், தருமபுரரி, மதுரை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல்லில் பரவலாக இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் காணப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த விவசாயிகள் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தயாரித்து ஒட்டும் திரவம் லிட்டருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவும் அல்லது கார்போசல்பான் 25 இசி 400 மில்லி , ஏக்கர் அல்லது புளுபென்டமைடு 20 WG 50 கிராம், ஏக்கர் தெளிக்கவும்.

நாற்றங்காலில் (20 சென்டுக்கு) இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 50 மில்லியினை 20 லிட்டர் தண்ணிரில் கலந்து தெளிக்கவும். 

நெல் குலைநோய் தாக்குதல் பரவலாக மழை காலங்களில் காணப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லில் வெடிப்புக்கான அறிகுறிகளான வெளிர்பச்சை நிறம் கொண்ட வெள்ளை சுழல் வடிவ புண்கள் தோன்றும். பழைய காயங்கள், சாம்பல் வெள்ளை நிறமாக சிதைவுண்டு காணப்படும். விவசாயிகள் டிரைசயிக்ளசோல் 75 டபள்யூ பி 200 கி, ஏக்கர் அல்லது கார்பன்டாசிம் 50 டபள்யூ பி 200 கி , ஏக்கர் மருந்தினை அறிகுறி தென்படவுவுடன் தெளிக்கவும். விவசாயிகள் நெல்லின் மேலாண்மைக்கு உயிர் உரங்களை பயன்படுத்துதல். 

உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள்: விதை நேர்த்திக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், சூடோமோனாஸ் பிஎப் 1 நீர்ம கரைசல் 10 மில்லி, கிகி விதை, நாற்றுவேர் குளியலுக்கு பிஎப் 1 நீர்ம கரைசல் (500 மில்லி, எக்டர்), மண்ணிற்கு பிஎப் 1 நீர்ம கரைசல் (500 மில்லி, எக்டர்) மற்றும் இலை தெளிப்பான் பிஎப் 1 நீர்ம கரைசல் 5 மில்லி என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

வெட்டுக்கிளி சேதம்: திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நேரடி நெல் விதைப்பு பயிர்களை வெட்டுக்கிளிகள் கடித்து சேதப்படுத்துகின்றன. இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் விளக்கு பொறி வைத்து கண்காணிக்க வேண்டும். சேதம் அதிகம் உள்ள இடங்களில் ஏக்கர் ஒன்றுக்கு குளோர்பரிபாஸ் 500 மில்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கல்ந்து கைத்தெளிப்பான் கொண்டு அடிக்க வேண்டும்.

பருத்தி: கோவை, தருமபுரி, மதுரை, பெரம்பலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான பச்சைதத்துப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ மற்றும் இலைப்பேன் இவைகளின் நடமாட்டம் தென்படுகிறது. ஆதலால், விவசாயிகள் ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் ஒட்டும் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும். இவற்றை கட்டுப்படுத்த அசிட்டாமபிரிட் 20 எஸ்பி 40கி, ஏக்கர் (அல்லது) குளோதயனிடின் 20 டபள்யூ டி ஜி 20 கி, ஏக்கர் பயன்படுத்தலாம். 

பருத்தி காய்புழுக்களை கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 5 என்ற அளவில் பருத்தி காய்ப்புழுக்கு தகுந்தால் போல் இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும். தேவைப்பட்டால் அசடிராக்டின் 0.03 சதவீதம் இசி 200 மில்லி / ஏக்கர் (அல்லது) குளேரான்டினிப்ரோல் 18.5 எஸ்சி 60 மில்லி ∕ ஏக்கர் (அல்லது) குளோர்பைரிபாஸ் 20 இசி 500 மில்லி, ஏக்கர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

கரும்பு: சேலம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொதுவாக தண்டுத்துளைப்பான் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்கு குறைவாகவே தென்படுகிறது. இருந்தாலும் இவற்றைக் கட்டுப்படுத்த முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிரமா ( 2.5 சிசி) ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தவும். 

நிலக்கடலை: கோயமுத்தூர் மற்றும் திண்டிவனம் மாவட்டங்களில் நில்க்கடலையில், வேரழுகல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதல் ஏற்படலாம். வேரழுகல் நோயை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் பூசணக்கொல்லி 0.2 சதவீதம் என்ற அளவில் மண்ணில் தெளித்து கட்டுப்படுத்தலாம். முன்பருவ இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த மேன்கோசெப் (அ) குளோரோதலோனில் 1000 கிராம் ஒரு எக்டருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பயறு: உளுந்து மற்றும் பச்சைபயறில் வேர்அழுகல் நோய் மற்றும் மஞ்சள்தேமல் நோய் புதுக்கோட்டை, திருநெல்வேலி, மற்றும் தேனி மற்றும் மாவட்டங்களில் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு கார்பன்டாசிம் என்ற மருந்தை லிட்டருக்கு 1 கி என்ற அளவில் செடியினை சுற்றி விட வேண]டும். மேலும், மஞ்சள்நிற ஒட்டு பொறியை 15 என்ற அளவில் அமைக்க வேண்டும் மற்றும் டைமீத்டோயேட் அல்லது மெத்தில் டெமட்டான் என்ற மருந்தை லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். 

வாழை: வாழையில் இலைப்புள்ளி நோய் தாக்குதல், கோயமுத்தூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதவீதம் அல்லது மான்கோசெப் 0.25 சதவீதம் அல்லது ப்ரபிகெனசோல் 0.1 சதவீதம் அதனுடன் ஒட்டுநர் திரவமான டீப்பால் சேர்த்து 3 முறை 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததில் இருந்து இலையின் அடிப்பகுதியில் தெளிக்கவும். 

பியூசேரியம் வாடல் நோயை கட்டுப்படுத்த கிழங்குகளை கார்பன்டாசிம் 2 கி,லிட்டர் கரைசலில் 30 நிமிடம் நனைத்து நடவு செய்யவும். மரத்தின் 3, 5 மற்றும் 7 ஆம் மாதத்தில் கார்பன்டாசிம் 2 விழுக்காடு (20 கி,லி) கரைசல் தயாரித்து 3 மி.லி யை கிழங்கினுள் செலுத்தவும். நோய் தாக்கப்பட்ட மரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற வாழை மரங்களுக்கும் கார்பன்டாசிம் (1 கி,லிட்டர்) தயாரித்து மரத்தை சுற்றி 2, 4 மற்றும் 6 ஆம் மாதத்தில் ஊற்ற வேண்டும்.

மக்காச்சோளம்: கோவை, திருப்பூர், மதுரை, புதுக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தண்டு துளைப்பான் தாக்குதல் தென்படுகிறது. இவற்றின் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை விளக்குப்பொறி வைத்து கண்காணிக்கவும். தேவைப்படின் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் மற்றும் ஒட்டுந்திரவம் 1 மி.லி ஒருலிட்டர் கலவைக்கு என்ற அளவில் சேர்ந்து பயன்படுத்தவும். டைமித்தோயேட் 2 மிலி அல்லது மீதிதேல் டெமடட்டான் 2 மிலி அல்லது குவினால்பாஸ் 2 மில்லி மருந்தை பயன்படுத்தலாம்.

தக்காளி : தக்காளியில் இலைக்கருகல் நோய்த் தாக்குதல் தென்படுகிறது. ஆதலால் விவசாயிகள் மான்கோசெப் என்ற மருந்தை, ஒருலிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கல்ந்து வாரமிருமுறை தெளிக்கவும். இலைப்பேன் மற்றும் வெள்ளை ஈக்களின் நடமாட்டம் தென்படும்பட்சத்தில் இமிடாகுளோபிரிட் 0.6 மில்லி அல்லது டைமித்தோயேட் 2 மிலி பரிந்துரைக்கப்படுகிறது.

வெண்டை:  வெண்டையில் சாம்பல் நோயை கட்டுப்படுத்த தூள் சல்பர் 10 கிலோ, ஏக்கர் அல்ல்து வெட்டபிள் சல்பர் 2 கி,லி என்ற அளவில் 15 நாள் இடைவெளியில் உபயோகிக்கலாம். மேலும் வெள்ளை ஈ, பச்சைதத்துப்பூச்சி மற்றும் சிலந்தி இவைகளின் நடமாட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை ஈ மற்றும் பச்சைதத்துப்பூச்சியை கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 0.6 மிலி,லி அல்லது டைமித்தோயேட் 2 மிலி,லி பரிந்துரைக்கப்படுகிறது. சிலந்தியை கட்டுப்படுத்த பிராப்பர்கேட் 2.5 மிலி,லி பயன்படுத்தலாம்.

வெங்காயம் : வெங்காயத்தில் இலை சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த ஒருலிட்டர் நீரில் மேன்கோசெப் 2 கி அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கி என்ற விகிதத்தில் தெளிக்கவும். அடிதண்டு அழுகல் நோயை கட்டுபப்படுத்த ட்ரைக்கோடர்மா விரிடி என்ற பூஞ்சாண கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கி என்ற அளவிலும் மற்றும் ஹெக்டருக்கு 2.5 கிலோ வீதமும் மண்ணில் இடவேண்டும்.

மஞ்சள் : ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மஞ்சள் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 400 கிராம், ஏக்கர் அல்லது ப்ரோபிகோனசோல் 200 மிலி, ஏக்கர் என்ற மருந்தை ஒரு வாரம் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.

தென்னை: பொள்ளாச்சி வட்டத்தில் சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பு தென்படுகிறது. வெள்ளை ஈக்களுடன் என்கார்சியா, கிரையோபா மற்றும் பொறிவண்டுகள் சேர்ந்து காணப்படுகிறது. இயற்கை எதிரிகளான இவை பூச்சிகளை கட்டுப்படுத்தும். என்கார்சியா ஒட்டுண்ணிகளை பாதுகாத்து அவற்றின் மூல்ம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். தேவைப்பட்டால் இந்த இயற்கை எதிரிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டு வெளியிடலாம். 

தென்னையில் ‘ரூகோஸ்’ சுருள் வெள்ளை ஈக்களும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னை ஒலைகளின் அடிபாகத்தில், முதிர்ந்த பெண் ஈக்கள் மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளை இடுகிறது. முட்டைகளில் இருந்து வெளிப்படும் நகரும் தன்மை கொண்ட இளம்புழுக்கள் இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றது.

நான்கு பருவங்கள் கடந்து கூட்டுப்புழுப் பருவத்தை அடைந்து பின்னர் முதிர்ந்த ஈக்களாக வெளிவருகிறது. 20-30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக உருவெடுத்து தென்னை ஒலைகளை பாதிப்படைய வைத்து விரைவில் அருகிலுள்ள தோப்புகளில் பரவு[கிறது. ஒலைகளின் அடியில் சுருள் வடிவத்தில் முட்டைகள் காணப்படும். இந்த ஈக்கள் வெளியேற்றும் திரவக் கழிவுகளால் ‘கேப்னோடியம்’ என்னும் கரும்பூசணம் படந்திருக்கும்.

மஞ்சள் நிறத்தில் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடைய, மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்படும் ஒட்டும் பொறிகள் (3 அடி நீளம், 1 அடி அகலம்) ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில், ஆறு அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க வைக்கலாம். பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க, இலை மட்டைகளில் உள்ள ஒலைகளின் அடிப்பகுதியில் தண்ணீர் தெளிக்கலாம். மேலும் மஞ்சள் நிற விளக்குப் பொறி பயன்படுத்தலாம்.

‘கிரைசோபிட்’ இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால், ஈ தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டருக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விடலாம். ஒருலிட்டர் நீருக்கு வேப்பெண்ணை 30 மி.லி., கலந்து தென்னை ஒலையின் அடிப்பகுதியில் தெளிக்கவும். கரும்பூசாணத்தை நிவர்த்தி செய்ய, மைதாமாவு கரைசலை (ஒருலிட்டர் நீருக்கு, 25 கிராம்) ஒலைகளின் மேல் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியும். மேலும், அதிக அளவிலான ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter